சட்டவிரோதக் கருக்கலைப்பு புகாரில் மருத்துவமனைக்கு சீல்: ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

சட்டவிரோதக் கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவருக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு சீல் வைப்பது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணானது என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சீல் வைத்த திருவண்ணாமலை மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்துள்ளது.

சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததாக திருவண்ணாமலையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.செல்வம்மாள் மீது திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டது. அதனடிப்படையில், அவருக்குச் சொந்தமான ஸ்ரீ புவனேஸ்வரி மருத்துவமனைக்கு மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குனரால் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி சீல் வைக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செல்வம்மாள் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், மருத்துவத்துறை உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததன் அடிப்படையில் மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் தரப்பில், “மருத்துவருக்கு எதிரான குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் அவர் தொடர்புடைய அசையும் சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை மீறும் வகையில் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் செயல்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது துணை இயக்குனர் தரப்பில், “மருத்துவர் செல்வம்மாள் மீதான குற்ற வழக்கில் இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது. சட்டவிரோதக் கருக்கலைப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் என்பதால் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி அப்துல் குத்தூஸ், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முரணாக மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, துணை இயக்குனர் பிறப்பித்த அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் எஸ்.குமாரதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் அரசு சிறப்பு கூடுதல் வழக்கறிஞர் வி.சண்முகசுந்தர் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.இன்பநாதன் ஆகியோர் ஆஜரானார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்