இ.டபுள்யூ.எஸ். இடஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்காத நிலையில் அண்ணா பல்கலை. அமல்படுத்தியது ஏன்? : சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்காத நிலையில் அண்ணா பல்கலைக் கழகம் மட்டும் அமல்படுத்தியது ஏன் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தங்களின் வசதிக்கேற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் நாளை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்டமேற்படிப்புகளுக்கும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பத்திருந்த மாணவி சித்ரா உள்ளிட்ட சில மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில் தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்குப் பதிலாக மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற நிர்பந்தம் செய்ததால் 2020-21-ம் ஆண்டில் இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, "மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகம், தமிழக அரசு ஒப்புதல் அளிக்காத பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கும் மட்டுமே அந்த ‘இடபுள்யூஎஸ்’ சான்றிதழ் வழங்கப்படுகிறது" என்று குற்றம் சாட்டினார்.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜராகி உயர் கல்வியில் அண்ணா பல்கலைக் கழகம் தன்னிச்சையாக விளையாடி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக் கழகம் எவ்வாறு செயல்பட முடியும். மேலும், ஏற்கெனவே மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு ஏன் அமல்படுத்தப்பட்டது.

நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அப்படியே பின்பற்றாமல், தங்களின் வசதிக்கேற்ப மாற்றி செயல்படுத்த விரும்பினால் அதற்கான விளைவுகளை அண்ணா பல்கலைக் கழகம் சந்திக்க நேரிடும். இதுதொடர்பாக பல்கலைக்கழகமும் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை நாளை (மார்ச் 12) தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்