மழை பாதிப்பை அமைச்சர் பார்வையிட வரவில்லை: விருத்தாசலம் விவசாயிகள் கொந்தளிப்பு

By என்.முருகவேல்

அண்மையில் பலத்தக்காற்றுடன் பெய்த கனமழையால் விருத்தாசலம், திட்டக்குடியை அடுத்த கொரைக்கைவாடி மற்றும் மங்களூரில், குடிசைகளும், விளைநிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில்,அந்தப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடக் கூட வரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

விருத்தாசலம் மற்றும் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மங்களூர், குடிகாடு, மாங்குளம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், 10 ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்ட பருத்தி, 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழக்கு ஆகியவற்றை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். மானாவாரி பகுதிகளான இப்பகுதியில் மழையை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த வருடம் தொடக்கத்திலிருந்தே மழை விட்டு, விட்டு பெய்ததால் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி, மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களை பயிர் செய்திருந்தனர். பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையால் வயல் வெளிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது.

நவ.9-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழை இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை. கடலூர், சிதம்பரம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் பெய்த அளவுக்கு இல்லையென்றாலும், சூறைக்காற்று இந்த பயிர்களை விட்டுவைக்கவில்லை. இதனால் மக்காச்சோளம், மரவள்ளி கிழங்கு பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி செடிகள் வேர்கள் அழுகி காய்ந்து வருகின்றன.

மாவட்டத் தலைநகரான கடலூருக்கும், கடலூர் மாவட்டப் பகுதிகளுக்கு 70 கி.மீ, தூரம் என்பதால், இது வரை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை யாரும் வந்து பார்க்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து பொய்னப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜூ என்பவர் கூறும்போது, ''மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஏக்கருக்கு ரூ.30முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி பயிர் செய்திருந்தோம். கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் பயிர்கள் பாதிக்கப்பட்டு செடிகள் அழுகி வருகின்றன. ஒருவாரம் ஆகியும், இதுவரை இப்பகுதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட அமைசசர் எம்.சி.சம்பத் வந்து பார்வையிடவில்லை. அதிகாரிகளும் வரவில்லை'' என்றார்.

அடரி கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் கூறும்போது, ''எங்கள் ஊரை சுற்றி சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயர் செய்துள்ளோம். பயிர் நன்கு விளைந்திருந்த நிலையில் மழை, சூறாவளிக் காற்று காரணமாக பயிர்கள் முறிந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிகாரிகள் யாரும் எங்கள் பகுதிக்கு வரவில்லை. எங்களில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் நிவாரண உதவி கிடைக்குமா? என்பதே தெரியவில்லை'' என வருத்தத்துடன் கூறினார்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி கூறும்போது, ''அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை விருத்தாசலத்தில் அமர்ந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துத்துவதாக அனைத்து துறை அதிகாரிகளுடன் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் ஒரு கண்துடைப்புக்காகவே நடத்துகின்றனர். உண்மையில் பாதிப்பை உணர்ந்து நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் யாரும் ஈடுபடவில்லை'' என்றார்.

இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கேட்டபோது, ''முதல்வரின் அறிவுருத்தல்படி பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறோம். சீனியர் அமைச்சர்கள் எனது தொகுதியான கடலூரில் முகாமிட்டுள்ளதால், அவர்களுடன் கூடுதல் நேரம் செலவழிக்கவேண்டியுள்ளது. இருப்பினும் விருத்தாசலம் பகுதிகளிலும் 16 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அதுகுறித்தும் கணக்கெடுக்கப்பட்டு யாருக்கும் பாரபட்சமின்றி நிவாரண உதவிகள் சென்றடைகிறது'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்