புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை நியமனத்தில் உள்நோக்கம்: கார்த்தி சிதம்பரம் எம்.பி. சந்தேகம்

By இ.ஜெகநாதன்

‘‘புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்ததில் உள்நோக்கம் இருக்கிறது,’’ என சிவகங்கை எம்.பி கார்த்திசிதம்பரம் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்து யார் வெளியேறினாலும் வருந்தத்தக்க விஷயம் தான். ஆனால் காங்கிரஸில் இருப்பவர் எக்காரணத்திற்காகவும் பாஜகவில் சேருவதை ஏற்க முடியாது. காங்., பாஜகவிற்கு 180 டிகிரி கொள்கை வேறுபாடு உள்ளது.

இதனால் அவர்கள் பாஜகவில் சேருவது சந்தர்பவாதம் தான். தலைவர்கள் பாஜகவிற்கு செல்வதை கட்சி அடிமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை.

புதுச்சேரியில் பலகாலமாக ஆளும்கட்சி மட்டுமன்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் கிரண்பேடியை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால் தேர்தல் சமயத்தில் திடீரென இரவோடு, இரவாக அவரை மாற்றியது புரியாத புதிராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு (அ) கிரண்பேடி தான் விளக்கம் தர வேண்டும். பொதுவாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை, தமிழக ஆளுநருக்கு தான் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் முழுக்க, முழுக்க தமிழக அரசியலில் ஈடுபட்டு, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்குக் கொடுத்துள்ளனர். அவரை நியமித்ததில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.

காங்கிரஸ் உறுப்பினர்களை பின்பக்கமாக இருந்து இழுப்பது மூலம் பாஜகவிற்கு செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. நாங்கள் ஆர்எஸ்எஸில் இருந்து, அதாவது அடிமட்டத்தில் இருந்து வருகிறோம் எனக் கூறும் பாஜகவினர் எதற்காக மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்களை இழுக்க வேண்டும்.

எப்படி இருந்தாலும் தேர்தல் முடிவு தெளிவாக இருக்கும். தமிழகத்தில் காங்., திமுக கூட்டணி வெற்றி பெறுவதுபோல், புதுச்சேரியிலும் அதே கூட்டணி தான் வெற்றி பெறும்.

நாடாளுமன்றத்தில் பயிர் கடன் தள்ளுபடி குறித்து காங்., திமுக கூட்டணி எம்பிகள் குரல் கொடுக்கவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அவர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். கடனை தள்ளுபடி செய்கிறார்களாக (அ) கடனை அடைக்க போகிறார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் கூட்டுறவு வங்கிகள் தற்போது மத்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன.

மேலும் கடன் தள்ளுபடி பெற்றவர்களால், இனி எந்த கடனையையும் பெற முடியாது என தகவல் பரவுகிறது. அதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும், என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

மேலும்