முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டும் நாயகனாக மட்டுமே இருக்கிறார்: கனிமொழி விமர்சனம்

By எஸ்.ராஜா செல்லம்

தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டும் நாயகனாக மட்டுமே இருக்கிறார் என, தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

தருமபுரி அடுத்த பழைய தருமபுரி சமுதாயக் கூடத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சந்தித்து உரையாற்றும் நிகழ்ச்சி இன்று (பிப்.16) காலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:

"தருமபுரி மாவட்டம் அதகபாடி ஊராட்சியில் 1989-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு எனச் சட்டம் கொண்டு வந்தவரும் அவர்தான். மகளிரின் சுய மரியாதையைக் காக்க திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு அதிமுக ஆட்சியில் சுழல் நிதி, மானியம் ஆகியவை வழங்கப்படுவதில்லை. இதனால், பொருளாதார நெருக்கடியால் மகளிர் தவிக்கின்றனர். மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் சுய உதவிக் குழுக்கள் மீட்டெடுக்கப்படும்.

மகளிரிடையே உரையாற்றும் கனிமொழி.

வேளாண் கடன் தள்ளுபடி மூலம் தமிழகத்தில் பயன்பெற்றவர்கள் அதிமுகவினர் மட்டுமே. ஏனெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன்கள் வழங்கப்பட்டன.

குடிமராமத்துப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணம் முழுவதையும் ஆளும் கட்சியினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனால்தான் நீர்நிலைகளில் தண்ணீரே இல்லை. திமுக ஆட்சி அமைந்ததும் உண்மையான குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என விலை கொடுத்து வாங்குகின்றனர். தருமபுரி வழியாகச் செல்லும் சனத்குமார் நதி முழுக்க ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. திமுக ஆட்சி வந்ததும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் எதுவுமே உருவாக்கப்படவில்லை. தருமபுரியில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கப்படாததால் மாவட்டத்தைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் தருமபுரி சிப்காட் மட்டுமன்றி தமிழகம் முழுக்கத் தொழில் வளம் உருவாக்கப்படும். அதன் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 80 சதவீதம் வரை ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவடைந்தன. அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக மீதமுள்ள பணிகளை முடிக்கவும் இல்லை, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவும் இல்லை. இதையும், வரவிருக்கும் திமுக ஆட்சி நிறைவேற்றும். மேலும், ஒகேனக்கல் உபரி நீரையும் பாசனத் தேவைக்காக ஏரிகளுக்கு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வரானவுடன் நிச்சயம் நிறைவேற்றுவார். தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சரின் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் யாரும் மக்களைச் சந்திப்பதே இல்லை. இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் மக்கள் கேட்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்".

இவ்வாறு கனிமொழி பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 85. ஆனால், உயர் கல்வி அமைச்சரின் மாவட்டமான தருமபுரியில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் 67. ஆட்சியாளர்கள் மக்களின் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிய இது ஒன்றே போதும்.

குடிமராமத்துப் பணிகளில் கணக்கு மட்டுமே எழுதிவிட்டுப் பணிகளைச் செய்யாமல் விட்டுள்ளனர். நீர்நிலைகளை மூடிவிட்டு மனைகளாக்கி ஆளும் கட்சியினர் விற்றுள்ளனர். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டங்களை ஆதரிப்பவராக இங்குள்ள முதல்வர் இருக்கிறார்.

தமிழகத்தில் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார். ஆனால், திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நாயகனாக மட்டுமே தமிழக முதல்வர் இருக்கிறார். பணிகள் எதுவும் நடப்பதே இல்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தொடர் விலையேற்றம் மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. இதனால், பெண்கள் விறகு அடுப்புக்கு மாறி மீண்டும் சிரமப்படுவர். விவசாயிகள் வாகனங்களுக்கு பதிலாக மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. உலக சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறவே இல்லை. ஆனால், இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் ஏறுகிறது. கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற சுமைகள் சுமத்தப்படுகின்றன.

திமுக பொய்யான வாக்குறுதிகள் தருகிறது என அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், திமுக அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றித் தரப்படும். கனவு காணக்கூடிய உரிமை அனைவருக்கும் உள்ளது. அதிமுகவினர் வெற்றி குறித்து கனவு கண்டுகொண்டே இருக்கட்டும்.

அரசியல் தலைவர்களில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. சசிகலா அரசியலுக்கு வருவது என்பது அவர் எடுக்க வேண்டிய தனிப்பட்ட முடிவு. அதைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது".

இவ்வாறு கனிமொழி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்