சென்னை, புறநகரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு; ராணுவ உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

மழை நின்றாலும் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இன்று இரவு வரை மழை பெய்யாவிட்டாலும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வானிலை முன்னறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல இடங்கள் மழைநீரில் தத்தளிக்கின்றன.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, 'வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காலை 8:30 (இன்று) மணி நிலவரப்படி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்பபுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மழை பெய்யலாம். தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடதமிழக கடல் பகுதியில் நீடிப்பதால், வட கடலேர மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்' என்றார்.

சுரங்கப்பாதைகளில் நீர் அகற்றும் பணி...

இன்றைய நிலவரப்படி சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில், தியாகராயநகர் மேட்லி சுரங்கப் பாதை, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை ஆகியவைகள் தவிர மற்ற சுரங்கப்பாதைகள் அனைத்திலும் நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப் பாதைகளில் மீனம்பாக்கம், பழவந்தாங்கல், தில்லை கங்காநகர், பரங்கிமலை ஆகியவற்றில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்க நடைபாதைகளில் தேங்கியுள்ள மழைநீரும் அகற்றப்பட்டு வருகிறது.

மழையால் 666 இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 167 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. 499 இடங்களில் தொடர்ந்து மழைநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழையால் சாய்ந்த 18 மரங்களில், 12 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

முகாம்களில் 29 ஆயிரம் பேர்...

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பேர் 37 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்து வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, சாலைகளில் வழிந்தோடுவதால், குன்றத்தூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடியாததால் தாம்பரம்-வேளச்சேரி சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகரப் பகுதியில், மழை விட்ட பின்னும் கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

ராணுவம் தீவிரம்...

சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு ராணுவத்தின் உதவியை கோரியது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தென்பிராந்திய ராணுவத்தின் 3 படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் கடந்த 2 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர். குறிப்பாக, முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் வௌ்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலமாக பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், ஹெலிகாப்டர் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 553 மீட்பு பணியாளர்களைக் கொண்டு 90 படகுகள் மூலம் 10 ஆயிரத்து 67 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காய்கறி, பால் தட்டுப்பாடு அபாயம்...

மழை நின்றாலும் சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தொடர் மழையால் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மழை நின்றாலும், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. ஏரிகள் நிரம்பி வழிவதால் மீண்டும் வீடுகளில் வெள்ளம் புகுமோ என்ற பீதியில் மக்கள் தவித்து வருகின்றனர்.

பெரிய ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறை ஊழியர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நாட்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள், மழை நின்றதால் இன்று வெளியில் வந்து உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். மீண்டும் மழை வருமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிகமாக வாங்கிச் சென்றனர்.

அதே நேரத்தில், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் அதிகரித்துள்ளது. பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

சினிமா

3 mins ago

விளையாட்டு

17 mins ago

சினிமா

26 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்