சேலத்தை சேர்ந்த திருநங்கைக்கு உதவி ஆய்வாளர் பதவி வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினிக்கு உதவி ஆய்வாளர் பதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கே.ப்ரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் பதவியில் சேர்வதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்தார். திருநங்கை என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தன்னை எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, அவர் எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். உடல் தகுதித் தேர்விலும் அவரை அனுமதிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல் தகுதித் தேர்வின்போது 100 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிக் கடக்காததால் நேர்காணலுக்கு ப்ரித்திகா யாஷினை அனுமதிக்கவில்லை.

நேர்காணலுக்கு அவரை அனுமதிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:-

பாலினப் பாகுபாட்டால் திருநங்கைகள் அனுபவிக்கும் சிரமத்தை மற்ற பாலினத்தவர்கள் உணர்வதில்லை. இவ்வழக்கில் மனுதாரர் ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவரை ஆணாக கருதுகின்றனர். வீட்டை விட்டு துரத்தப்பட்ட அவர், பெற்றோர் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில்தான், வேலை தேடி முயற்சி மேற்கொண்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பதவிக்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினம் என்ற பிரிவைச் சேர்க்கத் தவறிவிட்டனர். அதனால் தனது உரிமையை நிலைநாட்ட மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். திருநங்கைகளுக்கான தேர்வு அளவுகோலை கண்டறிய வேண்டும்.

ஓட்டத்தில் 1.1 வினாடிகள் பின்தங்கி வந்ததால், அதுதான் அவரைத் தேர்வு செய்வதற்கு குறுக்கே நிற்கிறது என்று நாங்கள் கருதவில்லை.

இந்த தேர்வில் வேறு திருநங்கை பங்கேற்கவில்லை. திருநங்கைக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டால், அது மனுதாரராகத்தான் இருக்கும்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், இரண்டு திருநங்கைகள் ஏற்கெனவே போலீஸாராக பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரையும் சேர்த்தால் மூன்றாவது நபர் ஆகிவிடும். இத்தேர்வு மூலம் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளைப் பார்க்காமல் விட்டுவிட முடியாது. மனுதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது திருநங்கைகwளை ஊக்கப்படுத்துவதாக அமையும். எனவே, மனுதாரருக்கு தகுதியில்லை என்று அவரைப் பாதியிலேயே விட்டுவிட முடியாது. உதவி ஆய்வாளர் பதவியைப் பெறுவதற்கு மனுதாரருக்கு தகுதி உள்ளது.

அடுத்தகட்ட தேர்வின்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், அதற்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினம் என்ற பிரிவைச் சேர்க்க வேண்டும். மனுதாரர் உதவி ஆய்வாளர் பதவியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி, மற்ற திருநங்கைகளுக்கு வழிகாட்டியாக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வழக்கில் சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர் பவானி சுப்பராயன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆகியோரைப் பாராட்டுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பணியில் சேரும் வாய்ப்பு கே.ப்ரித்திகா யாஷினிக்கு கிடைக்கும்பட்சத்தில் தமிழக காவல்துறை வரலாற்றில் காவல்துறை அதிகாரியாக (எஸ்ஐ) பதவியேற்கும் முதல் திருநங்கை இவராகத்தான் இருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்