வேலூர் மேயர் மன்னிப்பு கோரியதால் நீதிபதி குன்ஹாவை அவமதித்த வழக்கு முடித்துவைப்பு

By இரா.வினோத்

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹாவை அவமதித்த வழக்கில், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த ஆண்டு விதித்தார். இதையடுத்து நீதிபதி குன்ஹாவை கடுமையாக விமர்சித்து அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது வேலூர் மாநகராட்சியில், நீதிபதி குன்ஹாவை கண்டித்து மேயர் கார்த்தியாயினி (அதிமுக) தீர்மானம் நிறைவேற்றினார்.

இதற்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெய்குமார் ஹிரேமட், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “நீதித்துறையை அவமதித்த கார்த்தியாயினி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பில்லப்பா மற்றும் பனீந்தரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மேயர் கார்த்தியாயினி நேரில் ஆஜராகி, ''நீதிபதி குன்ஹாவை அவமதித்த விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளேன்.

அப்போது நீதிபதிகள் உத்தரவுப் படி நீதிபதி குன்ஹாவிடம் கடிதம் வாயிலாகவும், ஊடகங்கள் மூலமா கவும் மன்னிப்பு கேட்டேன். அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் இருந்து என்னை விடுவித்தது. அதேபோல நீதிபதி குன்ஹாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறேன். மேலும் பகிரங்க மன்னிப்புக் கோரி கன்னட செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடுகிறேன். எனவே கர்நாடக உயர் நீதிமன்றம் என்னை மன்னித்து, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மனுதாரர் ஜெய்குமார் ஹிரேமட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தர்மபால், “வேலூர் மேயர் தன‌து தவறை உணர்ந்ததால் மன்னிப்பை ஏற்கலாம்” என்றார்.

இதையடுத்து நீதிபதி பில்லப்பா, “மேயர் கார்த்தியாயினி மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொண்டு இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதே வேளையில் கன்னட செய்தித்தாள்களில் வெளியாகும் மன்னிப்பு தொடர்பான விளம்பரத்தை சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்