தத்துவத்தின் மனிதராக வாழ்ந்தவர் எழுத்தாளர் இளவேனில்: இளவேனில் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் புகழாரம்

By செய்திப்பிரிவு

தனி மனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக வாழ்ந்தவர் எழுத்தாளர் இளவேனில் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

மறைந்த எழுத்தாளர் இளவேனில் படத்திறப்பு விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், இளவேனில் மகன் சிந்து கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இளவேனில் உருவப் படத்தை திறந்து வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

1996-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்றதிமுக மாநாட்டில் இளைஞரணி சார்பில் திராவிட இயக்க கண்காட்சி அமைக்கப்பட்டது. அதற்கு உறுதுணையாக இருந்தவர் இளவேனில். அப்போது இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் அவரோடு பல நாட்கள் உரையாடியபோது திராவிடம், மார்க்சியம் என்று கொள்கைப் பிடிப்போடு பேசுவார். அதன்மூலம் எனக்கு திராவிட இயக்க கொள்கை மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.

யாரும் வருத்தப்படுவார்கள் என்றுகருதாமல் மனதில் பட்டதை தைரியமாக சொல்லக் கூடியவர். வாளாகவும், மலராகவும் இருந்தவர். கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். கருணாநிதிக்கு நெருக்கமாக இருப்பது அவ்வளவு எளிதானல்ல. கருணாநிதியின் மனதை அசைத்துப் பார்த்த படைப்பாளிகள்தான் அவருக்கு நெருக்கமாக முடியும். கருணாநிதியின் இதயத்தை ஈர்த்த படைப்பாளி இளவேனில். அவரால் பாராட்டப் பெற்றவர்.

திரைத்துறை மீதும் இளவேனிலுக்கு ஆர்வம் இருந்தது. கருணாநிதியின் கதையை வைத்து ‘உளியின் ஓசை'திரைப்படத்தை இயக்கினார். இளவேனில் மறைந்துவிட்டாலும் அவரது படைப்புகள் என்றும் இருக்கும். அவரைப் பற்றி நினைக்க நூற்றுக்கணக்கானோரை உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். தனி மனிதராக இல்லாமல் தத்துவத்தின் மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் இளவேனில் என்றார்.

விழாவில் நல்லகண்ணு பேசும்போது, “எழுத்தாளர் இளவேனில் எனக்கு மட்டுமல்ல, கம்யூனிச, திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர். நெருங்கிப் பழகியவர். கருணாநிதியின் மனதுக்கு நெருக்கமானவர். என்னைவிட 30 வயது குறைவான இளவேனில் மறைவு அதிர்ச்சியான நிகழ்வு. அதிகம் படிக்காதவர். ஆனால், மார்க்சியம், திராவிடக் கொள்கையை ஆழ்ந்து படித்தவர். அரசியல், இலக்கியம், திரைப்படம், விளையாட்டு, இசை என்று அவருக்குத் தெரியாத விஷயங்களே இருக்காது. பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், பேச்சாளர், ஓவியர், திரைப்பட இயக்குநர் என்று பன்முக ஆளுமை கொண்ட இளவேனில் ஒரு ஆச்சரியமான மனிதர். அவருடன் உரையாடிய தருணங்களை எப்போதும் மறக்க முடியாது” என்றார்.

தொல்.திருமாவளவன் பேசும்போது, “இளவேனில் இளம் வயதிலேயே மார்க்சியத்தை உள்வாங்கியவர். அதனால் அனைத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகியவர். சாதி, மத அரசியலை வீழ்த்த படைப்புகளை உருவாக்கினார். சமுக அமைப்பை அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடிய தலைவர்கள் உருவாக வேண்டும் என்று விரும்பினார். பெரியார் பாதைக்கும், மார்க்சிய பாதைக்கும் வேறுபாடு இல்லைஎன்பதை உணர்த்தியவர். ஒடுக்கப்பட்டவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பெண்களுக்காக நூல்களை எழுதியவர் இளவேனில்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்