அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம்: புதுச்சேரியில் காங். ஆட்சிக்கு இப்போது ஆபத்தில்லை

By செ.ஞானபிரகாஷ்

அமைச்சர், எம்எல்ஏ, காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவிகளை நமச்சிவாயம் இன்று ராஜினாமா செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் ராஜினாமா கடிதத்தைத் தந்தார். எனினும் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசுக்குத் தற்போது ஆபத்து இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

புதுவை மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலைக் காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் மாநிலத் தலைவரான நமச்சிவாயத்துக்கு, காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை எம்எல்ஏக்கள் ஆதரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். கட்சித் தலைமை அவரைச் சமாதானப்படுத்தி நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவியை வழங்கியது. அவரிடம், பொதுப்பணி, உள்ளாட்சி, கலால், வீட்டு வசதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

தேர்தலுக்குப் பிறகு அமைச்சராகப் பொறுப்பேற்றும், மாநிலத் தலைவராக நமச்சிவாயம் நீடித்து வந்தார். இந்த நிலையில் அவ்வப்போது நாராயணசாமி- நமச்சிவாயம் இடையே உரசல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு நமச்சிவாயத்திடம் இருந்து மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் மீண்டும் நமச்சிவாயம் கடும் அதிருப்திக்கு உள்ளானார்.

தனது அதிருப்தியைக் கட்சித் தலைமைக்கும் தெரிவித்தார். ஆனால், நாராயணசாமி தலைமையில்தான் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும், அவருக்குத் துணையாக இருங்கள் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டது. தலைமையின் இந்த முடிவு நமச்சிவாயத்துக்குக் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனிடையே புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிக் கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக வியூகம் வகுத்து வந்தது. காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களைத் தொடர்புகொண்டு பாஜக தேசிய நிர்வாகிகள் பேசி வந்தனர். இதில் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணையச் சம்மதம் தெரிவித்தார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரும் பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து நமச்சிவாயம், தனது ஆதரவாளர்கள் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். இன்று நண்பகல் தனது பதவிகளை ராஜினாமா செய்ய நமச்சிவாயம் முடிவு எடுத்தார்.

அதற்கு முன்பாக நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகப் புதுச்சேரி மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் காலையில் அறிவித்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவைக்கு வந்த நமச்சிவாயம், சபாநாயகர் சிவக்கொழுந்துவைச் சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் தந்தார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் கடிதம் தந்தார். முதல்வர் அலுவலகத்தில் நாராயணசாமி, முதல்வரின் செயலர் இல்லாததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் சபாநாயகரிடம் தந்தார். அத்துடன் தனது கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார். அமைச்சர் காரில் வந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தவுடன், காரை சட்டப்பேரவையில் ஒப்படைத்துவிட்டுத் தனது காரில் புறப்பட்டார்.

புதுவை சட்டப்பேரவையில் 3 நியமன எம்எல்ஏக்களுடன் மொத்தம் 33 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். அதில் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு நீக்கப்பட்டார். பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் மரணமடைந்து விட்டார். இதனால், புதுவை சட்டப்பேரவையில் 31 எம்எல்ஏக்களே இருந்தனர். தற்போது அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது சபையில் 29 எம்எல்ஏக்களே உள்ளனர். சபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும்.

ஆளுங்கட்சியான காங்கிரஸில் 12 பேரும், கூட்டணிக் கட்சி திமுகவில் 3 பேரும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் என மொத்தம் 16 பேரின் ஆதரவு அரசுக்கு உள்ளது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும், பாஜகவில் இருவரும் என 13 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மேலும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலக உள்ளதாகத் தகவல் வெளியானது தொடர்பாகக் காங்கிரஸ் மாநிலத் தலைவர்
ஏ.வி.சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, "காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. தொடர்ந்து ஆதரவு தரப் பலரும் தயாராக உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

34 mins ago

ஜோதிடம்

9 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்