ராமநாதபுரம் விவசாயிகள் எதிர்பார்ப்பு: பாரம்பரிய முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் பாரம்பரிய முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தன. இதன் மூலம், இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளின் பிறப்பிடம், தனித்தன்மை ஆகியவற்றை அறிய, இந்தக் குறியீடு உதவும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை, வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ, போலி யாகவோ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாகத் தடுக்க முடியும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்கு, கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு உட்பட 45-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத் துள்ளது.

மிளகாய் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை ஆகியவை அமெரிக்கா, சீனா, இந்தோனேசியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உலக அளவில் மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா (36%) முதல் நாடாக உள்ளது.

ராமநாதபுரம் முண்டு மிளகாய்

"உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு" எனத் திருஞான சம்பந்தர் தேவாரம் பாடலிலேயே ராமநாதபுரம் முண்டு மிளகாய் பற்றி சிலாகித்து கூறுகிறார். கார்த்திகையில் விதைத்து சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் முண்டு மிளகாய், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 19,280 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு மிளகாய் சாகுபடிக்காக ரூ. 10,000 செலவு செய்தால் மூன்று மடங்கு லாபமும் கிடைக்கும். மாவட்டத்தில் நிலவும் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரும் முண்டு மிளகாயின் தனித்தன்மையே அதன், அதிகப்பட்சமான காரத்தன்மைதான். இதனால் முண்டு மிளகாய்க்கு உலகளவில் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ளது.

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மிளகாய்த்தூள் உற்பத்தியாளர் களுக்கு இடையே ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளதைக் கண்டறிந்து, முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நறுமணப் பொருட்கள் வாரியத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது. இனியும் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்குவதில் தாமதம் கூடாது என்பதே ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ராமநாதபுரம் விவசாயி நடராஜன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் விளையக்கூடிய மஞ்சள், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மாதிரி, ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையக்கூடிய தனித்துவமான முண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தியாவில் விளையும் மிளகாய் ரகங்களில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு உலக அளவில் தனி அடையாளம் கிடைக்கும். மேலும் இதை நம்பி இருக்கிற ஆயிரக்கணக்கான மிளகாய் விவசாயிகளுக்கு கூடுதல் விலையும் கிடைக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்