பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும்: வைகோ

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (ஜன. 08) வெளியிட்ட அறிக்கை:

"பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்திய இக்கொடிய பாலியல் வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அதனை ஒளிப்பதிவு செய்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளித்ததை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஜோதிநகர் சபரிராஜன், பக்கோதிப்பாளையம் வசந்தகுமார், சூளேஸ்வரன்பட்டி சதீஷ், ஆச்சிபட்டி மணிவண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த 'பார்' நாகராஜன் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர்.

2019 பிப்ரவரியில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால், இதில் தொடர்புடையவர்கள் ஆளும் அதிமுகவின் முக்கியப் புள்ளிகள், அதிகாரம் படைத்தவர்கள் என்பதால் உரிய நீதி கிடைக்காது என்று திமுக, மதிமுக மற்றும் பல கட்சிகள், அமைப்புகள் போராடியதால், 2019 ஏப்ரலில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

தற்போது சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் மேலும் மூன்று நபர்களைக் கைது செய்திருக்கின்றனர். பொள்ளாச்சி வடுகபாளையத்தையுச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஆச்சிபட்டி ஹேரேன்பால் ஆகியோரை சிபிஐ கைது செய்திருக்கின்றது.

இதில் அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தவர். இவர் ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், முன்னணியினர், பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பவர் என்பதற்கான ஆதாரங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் சூறையாடப்பட்ட கொடிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் அதிமுக அரசே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது, நாங்கள் உத்தமர்கள் என்று கூறிய அதிமுகவினரின் முகத்திரை தற்போது சிபிஐ நடவடிக்கையால் கிழிந்துவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, இதில் சில பெரிய மனிதர்கள் தொடர்பு இருப்பதாகவும், தான் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியதை காவல்துறை அலட்சியம் செய்துவிட்டு, அந்தக் குற்றவாளியை மட்டும் கைது செய்தது. சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கை முழுமையாக விசாரணை நடத்தி, பின்னணியில் இருக்கும் ஆளும் கட்சி புள்ளிகள் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

பெண்களை தெய்வமாக வணங்கிப் போற்றும் தமிழ்நாட்டில், பொள்ளாச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் கொடுமை தமிழக வரலாறு இதுவரை காணாத கொடிய நிகழ்வு.

டெல்லியில் ஒரு 'நிர்பயா'வுக்குநடந்த கொடுமை ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது. தமிழகத்திற்கு அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அனைவரையும், சட்டத்தின் சந்துபொந்துகளில் தப்பிவிடாமல், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்