மனோரமாவுடன் நடித்த அனுபவங்கள் இன்றும் பசுமையாக உள்ளது: தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

By செய்திப்பிரிவு

பழம்பெரும் நடிகை மனோரமா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பழம்பெரும் திரைப்பட நடிகை திருமதி மனோரமா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்படும் திருமதி மனோரமா அவர்கள் இந்தியத் திரைப்படத் துறையில் மாபெரும் சாதனைப் படைத்தவர். மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய தலைமுறை கதாநாயகர்கள் மற்றும் இன்றைய தலைமுறை கதாநாயகர்களுடன் 1300 திரைப்படங்களுக்கு மேல் நடித்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர் திருமதி மனோரமா அவர்கள்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த மனோரமா அவர்கள் 1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் இயக்கிய “மாலையிட்ட மங்கை” திரைப்படத்தில் நடித்த முக்கிய வேடத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் கதாநாயகியாக 1963 ஆம் ஆண்டு வெளிவந்த “கொஞ்சும் குமரி” என்ற படத்தில் நடித்துள்ளார். பொம்மலாட்டம், சூரியகாந்தி, பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம், அன்பேவா, தில்லானா மேகானாம்பாள், சின்னத்தம்பி, உன்னால் முடியும் தம்பி, சம்சாரம் அது மின்சாரம், நடிகன் போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் திருமதி மனோரமா அவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் என்னுடன் பல படங்களில் நடித்துள்ளார் திருமதி மனோரமா அவர்கள். அவர் என்னுடன் நடித்து வெளிவந்த கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அவருடன் நடித்த அனுபவங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது. என்னுடன் அவர் நடித்து அன்று வெளிவந்த பொம்மலாட்டம் திரைப்படத்தில் அவரது சொந்தக் குரலில் பாடிய “வா வாத்தியாரே வூட்டான்ட” என்ற பாடலும், சூரிய காந்தி படத்தில் அவர் பாடிய “தெரியாதோ நோக்கு” என்ற பாடலும் அன்று பட்டித் தொட்டிகள் அனைத்திலும் பிரபலமானது ஆகும். இத்துடன் 300க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

இவர் திரைப்படத்துறையில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது, தேசிய விருது மற்றும் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.

திருமதி மனோரமா அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

திருமதி மனோரமா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்

கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்