கோயம்பேடு அண்ணா நகர் இடையே சுரங்கப் பாதையில் ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு: டிசம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்

By செய்திப்பிரிவு

கோயம்பேடு முதல் அண்ணா நகர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதைக்குள் ரயில் இன்ஜின் மூலம் சென்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் முதல்முறையாக ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு இன்னும் ஒரு மாதம் நடக்க உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2-வது வழித்தடத்தில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சின்னமலை ஆலந்தூர் பரங்கிமலை இடையே உயர்மட்ட பாதையில் பணிகள் முடிந்த நிலையில், மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

மற்றொரு வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப் பாதையில் பணிகள் நடந்து வருகின்றன. கோயம்பேடு முதல் அண்ணாநகர் டவர் வரை ரயில் பாதைகள், சிக்னல்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், இப்பாதையில் ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு செய்யும் பணி நேற்று காலை தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன்குமார் பன்சால், திட்ட இயக்குநர் ராமநாதன் மற்றும் அதிகாரிகள் காலை 11.30 மணி அளவில் ஆய்வுப் பணியை தொடங்கினர். முன்னதாக ரயில் இன்ஜின் முன்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

சுரங்கப் பாதைக்குள் ரயில் இன்ஜினைக் கொண்டுசென்று ஆய்வு செய்வது சென்னையில் இது முதல்முறை. கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைகள், சிக்னல்கள், ரயில் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர் டவர் வரை 4 கி.மீ. தூரத்துக்கு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டதை அடுத்து, சுமார் 60 டன் கொண்ட ரயில் இன்ஜின் மூலம் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில், 2.5 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாக சென்றது.

சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கும்போது, பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சுரங்கப் பாதையின் தரம், அதிர்வுகள் அளவு, மின் வயர்கள் இணைப்பு என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தோம்.

அடுத்தகட்டமாக..

ரயில் இன்ஜின் மூலம் இன்னும் ஒரு மாதத்துக்கு தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். சுரங்கப் பாதைக்குள் போதிய காற்றோட்டம் இருக்குமாறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரை 6 கி.மீ. தூரத்துக்கு டிசம்பரில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளோம். பணிகள் முடிந்த பிறகு எழும்பூர் வரை அடுத்தகட்டமாக சோதனை ஓட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்