பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (டிச. 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பிறப்புப் பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்து இலவசப் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும்.

பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்விதக் கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.

12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை, பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி,

* 1.1.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டது.

* மேற்கண்ட கால அளவு முடிந்த பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது.

அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிந்த நிலையில் பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டுக் குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைந்திட,

* 1.1.2000-க்கு முன் பெயரின்றி பிறப்புப் பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்

* வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிந்த அனைத்துப் பிறப்புப் பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம்.

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழ் பெற்றிடுவீர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்