தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தகவல்

By செய்திப்பிரிவு

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் டிசம்பர் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ்நாட்டில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து எதிர்க்கட்சிகள், அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பல நூற்றுக்கணக்கான இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுப் போராட்டத்தை வெற்றியடையச் செய்துள்ளனர். அனைவருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு, போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மூன்று வேளாண் விரோதச் சட்டங்களையும், மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐயும் உடனடியாகத் திரும்பப் பெற்று போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இழுத்தடிக்கும் அணுகுமுறையை மத்திய அரசு தொடருமானால், தமிழ்நாட்டில் மேலும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாகத் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பதுடன், விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் வரை அனைத்துப் பகுதியினரும் தங்களது பேராதரவினைத் தொடர்ந்து வழங்கிட முன்வருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்