ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவின் வெற்றி பாதிக்காது: உதகையில் கனிமொழி பேட்டி

By ஆர்.டி.சிவசங்கர்

ரஜினி உட்பட யாராலும் திமுகவின் வெற்றி பாதிக்காது என, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்கிற பிரச்சாரப் பயணத்தை எம்.பி.யும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி இன்று (டிச.4) நீலகிரி மாவட்டத்தில் மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மக்கள் மத்தியில் கனிமொழி பேசுகையில், "தற்போது இருக்கும் ஆட்சியில் படித்த பட்டதாரிகள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கல்லூரிகள் முறையாக இல்லாததாலும், படிப்பதற்கான வசதிகளைத் தமிழக அரசு செய்து தரவில்லை.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரிகள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பின்னர் குன்னூரிலிருந்து உதகைக்கு வந்த அவர், குன்னூர் அருகேயுள்ள அரக்காடு பகுதியில் கடும் மழை மற்றும் குளிரிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களைச் சந்தித்தார்.

தேயிலைத் தோட்டத்தில் இறங்கிப் பணியாற்றிய தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கனிமொழி.

அதனைத் தொடர்ந்து, காளான் உற்பத்தி செய்யும் குடில்களுக்குச் சென்று உற்பத்தி செய்யப்படும் நிலவரத்தைக் கேட்டறிந்தார். தொழிலாளர்கள் கூறிய கோரிக்கைகளைத் திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர், உதகையில் பழங்குடியினர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கனிமொழி கூறியதாவது:

"பிரச்சாரப் பயணத்தில் மக்களைச் சந்தித்தபோது திமுக வெற்றி உறுதி எனத் தெரியவருகிறது. இந்த 10 ஆண்டுகளில் மக்கள் எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லாமல், வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளனர். படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை சரி செய்யப்படவில்லை. பெண்கள் சிரமங்களுக்குத் தீர்வு காண வேண்டும். தேயிலை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேயிலைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பின்னர் காய்கறி, தேயிலை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு மாவட்டங்களுக்குச் சென்று படிக்கும் நிலை உள்ளது. அரசு இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சி எடுக்கவில்லை. பழங்குடியின மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன.

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அதனால் அவர் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. அரசியலுக்கு வராதவரைக் குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று நினைக்கிறேன். யார் வந்தாலும் திமுகவின் வெற்றி பாதிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக உள்ளன. யார் கட்சியைத் தொடங்கினாலும் எங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.

எதிலுமே அரசின் செயலாபாடுகள் சரியாக இருந்தது கிடையாது".

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

பிரச்சாரப் பயணத்தின்போது, மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மு.திராவிடமணி, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் க.ராமசந்திரன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்