ராமநாதபுரம் அருகே கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் சிவன் கோயிலுக்குத் தெற்கிலுள்ள குளத்தின் கரையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இன்று (நவ. 27) கள மேற்பரப்பாய்வு செய்தபோது, கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மகாவீரர் சிற்பம் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இது குறித்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறுகையில், "தமிழகத்தின் வரலாற்றில் சமணர்களுக்கு என்று தனி இடம் உண்டு. சமணமதம் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே கி.மு. 6-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் தழைத்திருந்ததை சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய சங்ககாலத்து நூல்களும், தேவாரம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்காலத்து நூல்களும் தெரிவிக்கின்றன.

வே. ராஜகுரு

திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சமணர் என தமிழ் அறிஞர்கள் வையாபுரி பிள்ளையும், தமிழ் தாத்தா உ.வே.சா-வும் தெரிவித்துள்ளனர். கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமயத்தின் எழுச்சியால், சமண சமயம் மெல்ல மெல்ல தமிழகத்தில் அழியத் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் சிவன் கோயிலுக்குத் தெற்கிலுள்ள குளத்தின் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரான மகாவீரர் உடையது. கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3 அடி உயரம், 1½ அடி அகலம் உள்ளது. கீழே பீடமும், அதன் மேல் மகாவீரரும் இருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் உள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. அவருக்குப் பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடை, அசோகமரம் உடைந்து சேதமாகியுள்ளன. மகாவீரரின் இருபுறமும் உள்ள இயக்கர்களின் சிற்பங்கள் உடைந்துள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும்.

இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாகக் கருதலாம். பல ஆண்டுகளாக வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்துள்ளது. இச்சிற்பம் கிடைத்திருப்பதன் மூலம் கி.பி.10-ம் நூற்றாண்டளவில் இவ்வூரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனக் கருதலாம்.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், மாறந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சைவ, வைணவ சமயங்கள் தமிழகத்தில் தழைத்தோங்கிய காலக்கட்டத்தில் சமண மதம் வலுவிழந்தது. அதனைத்தொடர்ந்து, சமண மதத்தைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டு நீர் நிலைகளில் எறிவது வழக்கமாக இருந்தது. இந்தச் சிற்பத்தை குளக்கரையிலிருந்து தமிழக அரசின் தொல்லியல்துறையினர் கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்