உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை; பேரறிவாளனின் விடுதலைக்கு இன்றே ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

பேரறிவாளனின் விடுதலைக்கு இன்றே ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (நவ. 22) வெளியிட்ட அறிக்கை:

"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தங்களுக்கு மறுப்பு ஏதுமில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய பிறகும் பேரறிவாளன் விடுதலையைத் தாமதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் அவமதிப்பதாகவே பொருள்படும். இனியும் சாக்குபோக்கு சொல்லாமல் இன்றே தமிழக அரசின் கோரிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

பேரறிவாளன் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எம்டிஎம்ஏ அறிக்கையை எதிர்பார்த்து ஆளுநர் காத்துக் கொண்டிருப்பதாகவும் அதனால் தான் இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

நேற்று சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் 'எம்டிஎம்ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை; விடுதலைக்கு ஒப்புதல் அளிப்பதா இல்லையா என்பதை ஆளுநர்தான் முடிவெடுக்கவேண்டும்; எம்டிஎம்ஏ விசாரணையின் நிலைகுறித்த விவரத்தைக் கேட்டு ஆளுநர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு எவ்வித வேண்டுகோளும் வரவில்லை; அந்த விவரங்களை எவருக்கும் தெரிவிக்கக்கூடாது என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என சிபிஐ அந்த பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் கூறியது உண்மைக்குப் புறம்பான தகவல் என்பது அம்பலமாகியுள்ளது. அதை வழக்கறிஞர் தாமே தெரிவித்தாரா அல்லது தமிழக அரசு அப்படி தெரிவிக்க சொன்னதா என்பதைத் தமிழக முதல்வர் விளக்க வேண்டும்.

சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பிறகும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் தாமதித்தால் அவர் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும். நாளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் சூழலில் ஆளுநர் இன்றே இது தொடர்பாக முடிவெடுத்து ஒப்புதலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தமிழக முதல்வர் ஆளுநரிடம் இதை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்