நீதிமன்ற உத்தரவை மீறுவதா?- ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழுமையாக சீல் வைக்காமல், போர்வெல் அமைந்துள்ள பகுதிக்கு மட்டும் சீல் வைக்க வேண்டும் எனவும், ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து நீர் எடுப்பது தெரியவந்தால், உடனடியாக ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் சீல் வைக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி அனந்த பத்மநாபன், நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் சீல் வைத்துள்ளதால், தங்களால் தொழில் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாகச் செயல்படுவதா? எனக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாகவும், நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து, உடனடியாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். பின்னர் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் போத்திராஜ், நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஒருவேளை நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடலாம் என மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து, விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்