விருத்தாச்சலம் கிளைச் சிறையில் கைதி மரணம்: சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் குறித்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியப் பகுதியில் உள்ள துர்கை அம்மன் கோயில் அருகே கடந்த அக்.30 அன்று இளம்பெண் ஒருவர் சாலையில் செல்லும்போது செயின் பறிப்பு நடந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து சக்தி நகரைச் சார்ந்த செல்வம் என்கிற செல்வமுருகன் (39) என்பவரைக் கைது செய்தனர்.

அவரைக் கைது செய்த நெய்வேலி போலீஸார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். செல்வமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 5) நள்ளிரவு உடல்நலக் குறைவின் காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நல்ல உடல்நிலையில் இருந்த செல்வமுருகனை அக்.28 அன்று போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரது கைது குறித்து தகவல் எதையும் அவரது குடும்பத்தினருக்குத் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா கூறுகையில், ''நாங்கள் பல இடங்களில் என் கணவரைத் தேடினோம். ஸ்டேஷனில் விசாரித்தபோதும் தகவல் தரவில்லை. கணவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்தும் புகாரை ஏற்கவில்லை.

இந்நிலையில் நல்ல உடல் நிலையில் இருந்த என் கணவர் திடீர் மரணம் என போலீஸார் தகவல் தருகின்றனர். வலிப்பு நோயால் இறந்ததாகச் சொல்கின்றனர். அவருக்கு வலிப்பு நோய் இருந்ததே இல்லை. அவர் உடலை வாங்கச்சொல்லி என்னை வற்புறுத்துகின்றனர். என் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து செல்வமுருகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் பிரேமா புகார் அளித்தார். உயிரிழந்த முருகனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஏற்கெனவே சாத்தான்குளம் விவகாரத்தில் போலீஸ் தாக்கியதால் சிறையில் இருந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரமும் பெரிதானது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் விருத்தாசலம் கிளைச் சிறையில் இறந்த செல்வம் என்கிற செல்வமுருகனின் இறப்பு மீதான புலன் விசாரணையைத் தமிழக டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

1 min ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

11 mins ago

சினிமா

2 hours ago

மேலும்