வாகனப் புகையைப் பரிசோதிக்காமலேயே வழங்கப்படும் போலி மாசுக் கட்டுப்பாடு சான்று: நடவடிக்கை எடுக்குமா போக்குவரத்துத் துறை?

By க.சக்திவேல்

கோவையில் வாகனப் புகையைப் பரிசோதிக்காமலேயே புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போலியாக மாசுக் கட்டுப்பாடு சான்றுகள் வழங்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாடு சான்று (பியுசி) பெற்றிருப்பது கட்டாயமாகும். அதை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்தச் சான்று இல்லாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம், வாகனத் தகுதிச் சான்று உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை.

வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போதும் புகை பரிசோதனைச் சான்று தேவைப்படுகிறது. இவ்வாறு சான்று அளிப்பதற்கென போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கபட்ட வாகனப் புகை பரிசோதனை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கோவை உட்படப் பல மாவட்டங்களில் அண்மைக் காலமாக அனுமதி பெறாமல் போலியாக வாகனப் புகை பரிசோதனை சான்றுகள் வழங்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாகக் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு கூறியதாவது:

''ஒரு கணினி மற்றும் பிரிண்டரை வைத்துக்கொண்டு வாகனத்தின் புகையைப் பரிசோதிக்கும் கருவி ஏதும் இல்லாமல், வாகனத்தின் புகைப்படத்தை மட்டும் பெற்றுக்கொண்டு போலியாகச் சான்று வழங்கி வருகின்றனர். இதற்குக் கட்டணமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.100 வசூலித்து வருகின்றனர்.

கோவை நீலம்பூர் புறவழிச் சாலையில் ராவத்தூர் பிரிவு அருகேயுள்ள ஒரு இடத்தில் எனது வாகனத்தின் புகையைப் பரிசோதித்தபோது, அளவுகள் அனைத்தும் பூஜ்ஜியம் எனப் பதிவு செய்யபட்டிருந்தது. பரிசோதனை மையத்தின் முத்திரை ஏதும் வைக்கப்படவில்லை. அந்தச் சான்று மீது சந்தேகம் எழுந்ததால் அன்றே சிங்காநல்லூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாகனப் புகை பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து அசல் சான்று பெற்றேன். எனவே, போலி மென்பொருள் மூலம் சான்று அளித்து வாகன ஓட்டிகளை ஏமாற்றி வரும் மையங்கள் மீதும், அதற்கு உடந்தையாக உள்ள அலுவலர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு லோகு கூறினார்.

அளவுகள் பூஜ்ஜியம் எனக் காட்டும் போலி மாசுக் கட்டுப்பாடு சான்று.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்துக் கோவை மண்டலப் போக்குவரத்து இணை ஆணையர் கே.உமா சக்தியிடம் கேட்டபோது, “அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்டிஓ), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் மாசுக் கட்டுப்பாடு சான்று வழங்கும் மையங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியுள்ளோம். அதில், போலியாக யாரேனும் சான்று வழங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளோம். இது தொடர்பாக எங்களுக்குத் தனியே வரும் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்