எம்ஜிஆர் வழியில் ரஜினியும் ஆட்சியைப் பிடிப்பார்!- முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா சிறப்புப் பேட்டி

By கே.கே.மகேஷ்

கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தேமுதிக போன்றவை முயன்றும் முடிவுக்குக் கொண்டுவர முடியாத திராவிடக் கட்சிகளின் ஊழல் ஆட்சியை ரஜினியால்தான் அகற்ற முடியும் என்கிறார் முன்னாள் எம்எல்ஏவான பழ.கருப்பையா.

இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இருந்தும் வெளியேறிய நீங்கள், திடீரென்று ரஜினியை ஆதரித்துப் பேசுவது ஏன்?

பாரதி சொன்னான், "இந்தியா விடுதலை பெற்றால் என்ன சிறப்பு ஏற்படும் தெரியுமா... இப்போது நல்லவனெல்லாம் மோசமாக நடத்தப்படுகிறான். கெட்டவன் எல்லாம் உயரத்தில் வைக்கப்படுகிறான். இந்தியா விடுதலை அடைந்தால், நல்லோர் பெரியார் எனும் காலம் வந்ததே கெட்ட நயவஞ்சகருக்கு நாசம் வந்ததே" என்று கனவு கண்டான். ஆனால், என்ன நடந்தது? நயவஞ்சகக்காரர் எல்லாம் அரசியலுக்கு வந்து வாழ்வு பெற்றுவிட்டார். கெட்டவர் ஒவ்வொருவரும் ஆயிரம் கோடி, 500 கோடி ரூபாய் சொத்து சேர்த்துவிட்டார். நல்லவர்கள் எல்லாம் ஒழிந்துபோனார்கள்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஒழிந்தால்தான் நல்லவர்கள் வாழவும், நயவஞ்சகர்கள் ஒழியவும் முடியும். 50 ஆண்டுகளாக இவர்களுக்கு மாற்று இல்லையே என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவாவது ஒரு புதிய மனிதன் ஒரு புதிய கட்சியைத் தொடங்க வேண்டும். எனவேதான் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

திமுக, அதிமுக இரண்டும் வலிமையான, அடிப்படைக் கட்டுமானமுள்ள கட்சிகள். ரஜினி கட்சி தொடங்கவே தயங்குவதுபோல் தெரிகிறது. அவரால் வெறும் 6 மாதங்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறீர்கள்?

டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக என்ற இரண்டு வலிமைமிக்க தேசியக் கட்சிகளை கேஜ்ரிவால் என்கிற சாமானிய மனிதன் வீழ்த்தவில்லையா? மாஸ் லீடர் அல்லாத ஒரு சாமானியனால், இரு தேசியக் கட்சிகளை ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்ற முடியும் என்றால், ரஜினிகாந்த் போன்ற மிகப் பிரபலமான, மாஸ் அடையாளம் கொண்டவரால் ஏன் முடியாது? ரஜினி என்ன சொன்னாலும் அடுத்த நிமிடமே அவரது குரல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் எதிரொலிக்கும். எனவே, அவர் அந்த இடத்தை அடைவது எளிதானதுதான்.

தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் மக்களின் தேர்வு திமுக, அதிமுகவாகத்தானே இருக்கிறது?

அதற்குக் காரணம், அவர்கள் மீது கொண்ட அபிமானம் அல்ல. இரண்டு கட்சிகளுக்கும் தமிழ்நாடு முழுக்கக் கிளை அமைப்பும், வாக்கு வங்கியும் இருக்கிறது. எனவே, திமுகவை வெறுத்து ஒதுக்கினால், அதிமுகவும், அதிமுகவின் ஊழலை வெறுத்து வாக்களித்தால் திமுகவும் ஜெயித்துவிடுகின்றன. ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களும் அதே ஊழலைச் செய்கிறார்கள். இந்த 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்குப் பல கட்சிகள் முயன்றன.

கம்யூனிஸ்ட்கள் முயன்றார்கள். வைகோ முயன்றார். விஜயகாந்த் முயன்றார். ஆனால், அவர்களால் எல்லாம் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், சென்னை முதல் குமரி வரை கிளைக் கழகங்கள் அமைந்துவிட்ட ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், அந்தக் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. இக்கட்சியை அக்கட்சியும் அக்கட்சியை இக்கட்சியும்தான் அகற்ற முடியும். ஆகவேதான், திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.

ஒரு முறை கருணாநிதியைத் தவிர அனைத்துத் திமுக வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடித்தார்கள். இன்னொரு முறை, ஜெயலலிதாவையும் சேர்த்து அதிமுக வேட்பாளர்களை மக்கள் படுதோல்வி அடையச் செய்தார்கள். ஆனால், ஊழலை ஒழிக்க முடியவில்லை. வலிமை வாய்ந்த இன்னொரு கட்சி களத்திற்கு வந்தால்தான், இவ்விரு கட்சிகளையும் அகற்ற முடியும். திமுக ஊழலை அம்பலப்படுத்திக் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே எப்படி எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தாரோ, அப்படி ரஜினியாலும் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியை வீழ்த்த வழியே இல்லையா என்று மக்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். எனவே, ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பிப்பார் என்றுதான் நானும் நம்புகிறேன். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள்தான் இருக்கிறது என்றாலும், ஊடகங்கள் பலமாக இருப்பதால் அவரது கட்சியை சீக்கிரமே மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

சினிமாத் துறையினரைக் கடுமையாக விமர்சித்து காந்தி, காமராஜர் என்று பேசிய தமிழருவி மணியன், பழ.கருப்பையா எல்லாம் கடைசியில் ரஜினிகாந்த் வாழ்க என்கிற நிலைக்கு வரக் காரணம்?

திரைத்துறையை ஒட்டுமொத்தமாக விமர்சித்தவன் அல்ல நான். ஒட்டுமொத்தமாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மட்டம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் ஒழுக்கத்தைப் பொறுத்த விஷயம் அது. நான் ரஜினியோடு பழகியவன். சினிமா நடிகர்களில் ரஜினியைப் போன்ற எளிமையான ஆளை நான் பார்த்ததே இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் வழுக்கையை மறைக்கத் தொப்பி, முதிய தோற்றத்தை மறைக்க தினமும் மேக்கப் என்றிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அல்லாமல் நரைத்த தாடி, வழுக்கைத் தலையுடன் வலம் வருபவர் ரஜினி.

வாடகை பாக்கி, வரி பாக்கி என்று அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் ரஜினியின் பெயர் அடிபடுகிறது. எந்த அடிப்படையில் அவரது நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள்?

திமுக, அதிமுகவை ஒழித்துக்கட்ட வலிமையான, மக்களுக்கு நன்றாக அறிமுகமான ஒருவர் தேவை. இப்போதைக்கு அது ரஜினிதான். மற்ற விஷயங்கள் பற்றி எல்லாம் இப்போது நான் பேச விரும்பவில்லை. கொஞ்ச நாள் போகட்டும் விரிவாகப் பேசலாம்.

இவ்வாறு பழ.கருப்பையா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

5 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

14 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்