பெண் எழுத்தாளர்களுக்கு அம்மா இலக்கிய விருது, மொழிபெயர்ப்பாளர்களுக்கு அங்கீகாரம்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், மகளிர் இலக்கியங்களைப் படைக்கும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் "அம்மா இலக்கிய விருது" வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

முதல்வரின் அறிவிப்பு:

பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம் பேதைமை யற்றிடும் காணீர்! - என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ' அம்மா இலக்கிய விருது' என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும். "அம்மா இலக்கிய விருது" பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்.

மொழி பெயர்ப்பாளர் விருது:

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழி படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த ' மொழி பெயர்ப்பாளர் விருது' வழங்கப்படும். இவ்விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

'தமிழ்க் கவிஞர் நாள்'

பாவேந்தர் பாரதிதாசன் புகழைப் பரப்பிடும் வகையில் அவரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, இரண்டு நாள் கவியரங்கம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும். மேலும், இந்த ஆண்டு முதல் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள், 'தமிழ்க் கவிஞர் நாள்' என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

'உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்'

இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும், சித்திரை தமிழ்ப் புத்தாண்டில் 'உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்' வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும் தகுதியுரையும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரிய மொழியில் திருக்குறள்

திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும், கொரியாவில் தமிழர்களும், தமிழகத்தில் கொரியர்களும், வாழ்ந்து வருவதைக் கருதியும் பார்போற்றும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கொரிய மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கென, முப்பத்தாறு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஓரடியில் உலக மக்களுக்கேற்ற எளிய அற நெறிக் கருத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியின் அற நெறிக் கருவூலமான ஆத்திசூடியை சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென, பதினைந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்