தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை: உயர் நீதிமன்ற கிளையில் அரசு தகவல்

By கி.மகாராஜன்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நெல்லை நாரணபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டத்திற்கான புதிய ஆட்சியர் அலுவலகம் மேலகரம் பேரூராட்சியில் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் குற்றாலம் மெயின் அருவி, காட்டாறு, செண்பகாதேவி அருவியிலிருந்து தென்கால் பாசனத்துக்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைந்துள்ளது.

காங்கேயன்குளம், வட்டவயல்குளம், குலசேகரபேரிகுளம், சன்னதி மேட்டுக்குளம், பட்டக்குளம், புறாக்குளம் உள்ளிட்ட 13 குளங்களுக்கு தண்ணிர் வரும் பகுதியாகும்.

மேலகரம் பேரூராட்சி, ஆயிரப்பேரி, காட்டப்பத்து ஊராட்சி பகுதிகளில் பெரும்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்துள்ளது. பல ஹெக்டேர் பரப்பளவில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்டினால் விவசாயம் பாதிக்கும்.

ஆலங்குளம், மலைக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆட்சியர் அலுவலகம் கட்டலாம்.

எனவே, விவசாய நிலங்கள் பாதிக்காமல் இருக்கவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதித்து, வேறு பகுதியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கை தொடர்பாக பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் வழக்கறிஞர் வாதிடுகையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட ஆட்சியர் தென்காசி நகரில் 12 இடங்களை தேர்வு செய்து அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என கூறுகின்றனர். தென்காசி மக்கள் 96 சதவீதம் பேர் மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட விரும்பவில்லை என்றார்.

சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடுகையில், தென்காசி ஆட்சியர் அலுவலகம் கட்ட நிதி ஓதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் நிலம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றார்.

இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகுவதற்காக விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

38 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்