குறுவை கொள்முதல் பின்னடைவால் பேரழிவு ஏற்படும் அபாயம்: பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டாவில் குறுவை அறுவடை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்குப் பருவ மழை, பருவம் மாறிப் பெய்வதால் கொள்முதலில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இப்படிக் கொள்முதலில் அலட்சியம் காட்டப்படுவது தொடர்ந்தால் விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்று தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"காவிரி டெல்டாவில் குறுவை அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் சுழகம் மூலம் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு 1000 சிப்பங்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் 500 முதல் 600 சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதனால் கொள்முதலில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் தொடர்ந்து சுமார் 3 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் கிராமங்களில் நெல்லைக் குவியல்களாகக் கொட்டி வைத்து விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அவ்வப்போது பெய்து வரும் மழையால் நெல் குவியல்கள் நனைந்து, வீதிகளில் அடித்து செல்லப்படுவதால் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

நெல் மழையில் நனைவதிலிருந்து பாதுகாக்க, தேவைக்கேற்ப தார்ப்பாய்கள் மற்றும் சாக்குப் பைகளை விவசாயிகளுக்கு முன்கூட்டி வழங்க வேண்டும். தேவையான சுமைதூக்கும் பணியாளர்களை அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பணியமர்த்த வேண்டும். அக்டோபர் 20-ல் வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன் அறுவடை, கொள்முதலை முடிக்க வேண்டும். இல்லையேல் பேரழிவு ஏற்படும்.

ஆகஸ்ட் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், லட்சக்கணக்கில் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன். தற்காலிகக் கிடங்குகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளதால் மூட்டைகளை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் 60,000 டன் கொள்ளளவு கொண்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான புதிய கிடங்கு, உள் சாலை அமைக்காததால் பயனற்றுக் கிடக்கிற அவலம் தொடர்கிறது.

மத்திய அரசுக்குச் சொந்தமான கிடங்குகள் காலியாக உள்ள நிலையில் வாடகைக் கட்டணம் அதிகம் என்பதால் அதனைப் பயன்படுத்த நுகர்பொருள் வாணிபக் கழகம் மறுத்து வருகிறது. பாதிப்பைக் கருத்தில் கொண்டு தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் உணவு தானியக் கிடங்குகளை வாடகையின்றிப் பெற வேண்டும். அன்றாடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்குச் கொண்டு செல்லப்பட வேண்டும்.

கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த மாநில உயர் அலுவலர்கள் குழுவை அனுப்பி வைத்திட முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கிறேன்."

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்