திண்டுக்கல் சிறுமி வழக்கில் குற்றவாளி விடுதலை; அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வழக்குகளில் போலீஸாரின் மெத்தனம் காரணமாக குற்றவாளிகள் தப்பிப்பதைத் தடுக்க சிபிசிஐடி போலீஸ் அமைப்பு போல் பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தில் வசித்த 12 வயதுச் சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்டார். தாயார் கடைக்குச் சென்று விட்டு திரும்பும் நேரத்தில் தனியாக இருந்த சிறுமி இக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் எதிர்வீட்டைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டார். வன்கொடுமை செய்து பின் மின்சாரம் பாய்ச்சி சிறுமியைக் கொலை செய்ததை அச்சிறுவன் ஒப்புக்கொண்டதாக போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தினர்.

ஆனால், வழக்கில் போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக் கீழமை நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்தது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யப்படும் என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் இந்தச் சம்பவத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் ஆதி திராவிட நல அணி இன்று வெளியிட்ட அறிக்கை:

''திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரது 12 வயது மகளை கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து, உடலில் மின்சாரம் பாய்ச்சி, கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டிய காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் மெத்தனமாக நடந்து கொண்ட காரணத்தால் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்த அவ்வழக்கின் குற்றவாளி மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என மாவட்ட மகிளா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டிருப்பது காவல்துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி வருவதும், அக்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர், ஆளுங்கட்சியினரும், மேல்தட்டு வர்க்கத்தினர் தரும் நெருக்கடி காரணமாக மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையும், நீதித்துறையும் நமக்கு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கையோடு இருக்கும் ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் தகர்த்தெறியப்பட்டு வருவது வேதனைக்குரியது.

நாடு முழுவதும் இது வரை நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர அரசுத் தரப்பும், காவல்துறை தரப்பும் தவறியதால் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போவது அதிகரித்திருக்கிறது.

விளைவு குற்றமிழைப்பவர்களின் எண்ணிக்கையும், பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, இனியாவது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போன்று காவல்துறையில் தனிப் பிரிவை உருவாக்க தமிழக அரசு முன் வர வேண்டும்

அத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வெங்கடாசலம் மகளின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வகையில் அவ்வழக்கில் தமிழக அரசு தாமதமின்றி மேல்முறையீடு செய்து அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரும் வகையில் வழக்கினை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஆதி திராவிட நல அணி சார்பில் வலியுறுத்துகிறோம்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தாமதமின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 mins ago

தமிழகம்

10 mins ago

சினிமா

21 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்