இணையதளத்தில் ஊதியப் பட்டியல்; விரைந்து சமர்ப்பிக்க கோவை ஆட்சியர் வலியுறுத்தல்

By கா.சு.வேலாயுதன்

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஊதியப் பட்டியலை இணையதளத்தில் விரைவாக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களையும் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கேட்டுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடந்த அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.

மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் அதாவது முழு கணினிமயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, நடைமுறையில் இருந்த தன்னியக்கக் கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதரப் பட்டியல்களைக் கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் மூலம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு, எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதிவு செய்யப்படும். அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது இத்திட்டத்தின் மூலம் முழுமையாகக் கணினி மயமாகிறது.

பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். இத்திட்டம் மாநிலக் கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன.

இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம.துரைமுருகன், மாவட்டக் கருவூல அலுவலர் ராஜா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (கணக்கு).சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

''கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தை முழுவதும் செயல்படுத்தும் வகையில் தேவையான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துத் துறைகளும் ஊதியப் பட்டியலை ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர். அதிக அளவு பணியாளர்களைக் கொண்ட காவல்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் 35,468 பணியாளர்களில் இதுவரை 19,789 பணியாளர்களுக்கு ஊதியப் பட்டியல் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியாளர்களின் பட்டியல்களை வரும் 21-ம் தேதிக்குள் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பணம் பெற்று வழங்கும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஊதியப் பட்டியலை விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டியல் தயாரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்குத் தேவையான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கக் கருவூலத்துறை அலுவலர்கள் மற்றும் விப்ரோ பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான மென்பொருளில் சர்வரின் வேகத்தை அதிகரிக்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் முழு வேகத்துடன் அனைத்துத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டம் கொண்டுவரப்படும்.

அரசின் இத்திட்டத்திற்கு அனைத்து கருவூலத் துறை அலுவலர்களும், பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் இத்திட்டத்திற்கு உறுதுணையாக இருந்து திறம்படச் செயல்படுத்திடும் வகையில் பணியாற்றிடக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது''.

இவ்வாறு ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்