ஏற்காடு ஏரியில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு விரைவில் அனுமதி

By செய்திப்பிரிவு

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் படகு சவாரிக்காக, ஏரி முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, சேலத்தில் இருந்து 36 கிமீ., தொலைவில், சேர்வராயன் மலை உச்சியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,326 அடி உயரத்தில் உள்ளதால், ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவுகிறது.

இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், மரபணுவியல் பூங்கா உள்ளிட்டவை உள்ளன. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் திரும்புவதில்லை. சலசலக்கும் ஏரியில், குளுகுளு காற்றினை அனுபவித்தபடி, மலை முகடுகளையும் அடர்ந்த மரங்களையும் காணுவது, சுற்றுலாப் பயணிகளின் மனதுக்கு புத்தம் புது உணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

எனினும், கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஏற்காடு, சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி இருந்தது.

தற்போது, ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெற்று, ஏற்காடு வந்து செல்லவும், அவர்களது வசதிக்காக, ஏற்காட்டில் தோட்டக்கலைத் துறையின் புகழ்பெற்ற பூங்காக்களும் திறக்கப்பட்டுவிட்டன. எனினும், ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கு மட்டும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, படகுகள் பயணிக்காமல் சலனமின்றி காணப்பட்ட ஏற்காடு ஏரியில், ஆகாயத் தாமரைகள் போர்வையாய் படர்ந்து, நீர் பரப்பை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. இதனால், நீல வானத்தின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்த ஏற்காடு ஏரி, ஆகாயத் தாமரையினால், வயல்வெளி போல மாறிவிட்டது. முக்கியமாக, ஏரியில் படகுகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியைத் தொடர்ந்து, ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை, சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, ஏரியில் படகு போக்குவரத்து இல்லை. இச்சூழலில் மழைக்காலம் என்பதால், ஏரி நிரம்பி அவ்வப்போது உபரி நீர் வெளியேறி வருகிறது. பயன்படுத்தாமல் இருந்த ஏரி நீரில், ஆகாயத் தாமரை செடிகள், ஏரியின் பெரும்பான்மை இடத்தை ஆக்கிரமித்துவிட்டன.

ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றினால், நீர் பரப்பில் படகுகளை சிரமமின்றி இயக்க முடியும். எனவே, ஆகாயத்தாமரைகளை அகற்றி, நீரை தூய்மைப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்கப்படாமல் இருந்தாலும், படகுகள் அனைத்தையும் அவ்வப்போது பராமரித்து, தயார் நிலையில் வைத்துள்ளோம். அரசு அனுமதி வழங்கும்போது, ஏற்காடு ஏரியில் படகு சவாரி தொடங்குவதற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்கிறோம்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

ஜோதிடம்

14 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்