குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏறத்தாழ 190 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 55 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் மூன்றாவது இடத்திற்கும், குழந்தைகளை கொலை செய்வதில் நான்காவது இடத்திற்கும் தமிழகம் முன்னேறி இருக்கிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் முன்னேற்றமா?

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் 2011ஆம் ஆண்டில் 925 ஆக இருந்தது. முதலமைச்சராக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆண்டுதோறும் எண்ணிக்கையில் பெருகி தற்போது 2014ஆம் ஆண்டில் 2354 ஆக உயர்ந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான இந்த வன்கொடுமைகள், குற்றங்கள் பெருகுவதற்கு காரணம், தமிழகத்தில் ஆறாக ஓடுகிற மதுவும், சமூகத்தில் மாறாத, ஒழிக்கப்படாத சாதி, மத ஏற்றத்தாழ்வுகளும், தலைவிரித்தாடுகிற வறுமையும், நாட்டில் நடக்கின்ற கொடுமைகளை கண்டும் காணாத காவல்துறையும், மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சியாளர்களும்தான் என்று சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் தெரிவிக்கின்றன.

இந்த குற்றங்கள் அனைத்தும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டவை. ஆனால் இதைவிட அதிகமான குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படாமலேயே மறைக்கப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.

உண்மை நிலை இவ்வாறு இருக்க ஆட்சியாளர்களோ, பொய்யும், புரட்டும் பேசி, குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருப்பதைப்போன்ற ஒரு மாயதோற்றத்தை வெற்று அறிவிப்புகள் மூலம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறதென்று சட்டமன்றத்தில் பேசுகிறார்கள். தங்களை தாங்களே பாராட்டியும், புகழ்ந்தும், தற்பெருமை பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிரிப்போடு அமர்ந்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்தாலே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் குறைந்துவிடும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு, அதிமுக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். அதை செயல்படுத்தினாலே தமிழகத்தில் நடைபெறுகின்ற பெரும்பாலான குற்றங்கள் தடுக்கப்படும்.

இந்த உண்மை தெரிந்தும், மக்களை பற்றி சிந்திக்காமலும், மக்களின் நலன் குறித்து கவலைப்படாமலும் மது விற்பனையின் மூலம் அரசுக்கும், தங்களுக்கும் கிடைக்கும் வருமானம் குறித்து மட்டுமே கவலைப்படும் இந்த அதிமுக ஆட்சிக்கு, உரிய நேரத்தில் தக்க பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள் என்பது நிச்சயம்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

விளையாட்டு

11 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்