வாய் சிதைந்து உணவருந்த முடியாமல் கோவையில் சுற்றிவந்த 'மக்னா' யானை தமிழக-கேரள எல்லையில் உயிரிழப்பு

By க.சக்திவேல்

வாய் பகுதி சிதைந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உணவருந்த முடியாமல் தவித்து வந்த 'மக்னா' யானை தமிழக-கேரள எல்லையை ஒட்டிய பகுதியில் இன்று காலை உயிரிழந்தது.

கோவை மாவட்டம், மருதமலை அடிவாரத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி வாயில் காயம்பட்ட நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்த, தந்தம் இல்லாத ஆண் யானையை (மக்னா) வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். பின்னர், மருதமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்த யானை, தடாகம்-மாங்கரை- ஆனைக்கட்டி வழியாக ஆகஸ்ட் 17-ம் தேதி கேரள வனப்பகுதிக்குள் சென்றது. கேரள வனத்துறையினர், காயம்பட்ட யானையை வயநாடு புலிகள் காப்பகத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, காயத்துக்குச் சிகிச்சை அளித்தனர்.

அப்போது, யானையின் நாக்குப் பகுதி சிதறி இருந்ததும், அதன் மேல் தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு எந்தவித சிகிச்சையும் அளிக்க முடியாது என்பதால், வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் யானையை விட்டனர்.

கடந்த மாதம் 27-ம் தேதி மீண்டும் கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட நரசிபுரம் பகுதியில் யானை தென்பட்டது. கோவை வனத்துறையினர் யானையைத் தங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, மருந்துகள் கலந்த உணவு, பழங்கள் என உணவு மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் சுற்றிவந்த யானை, கடந்த 7-ம் தேதி மீண்டும் கேரளா சென்றது. இந்நிலையில், தமிழக-கேரள எல்லையில் ஆனைக்கட்டி, சோலையூர் அருகே மரப்பாலம் பகுதியில் சாலையில் படுத்திருந்த யானை இன்று (செப். 9) காலை உயிரிழந்தது.

'புல்டோசர்' யானை

செல்லும் வழிக்கு அருகில் உள்ள வீடுகளை இடிப்பதை வழக்கமாகக் கொண்ட இந்த யானையை, கேரள மக்கள் 'புல்டோசர்' என்று அழைத்து வந்தனர். 'இந்த யானையைப் பிடித்து சிகிச்சை அளிப்பது பலனளிக்காது. மேலும், நீண்ட நாட்கள் யானை உயிர் வாழாது' என்று முன்கூட்டியே கோவை வனத்துறையினர் தெரிவித்த நிலையில் இன்று யானை உயிரிழந்தது.

இருப்பினும், வாய் சிதைந்து உணவருந்த முடியாமல் யானை உயிரிழந்துள்ளதால், அதற்கான உண்மையான காரணத்தை விசாரித்து வனத்துறையினர் தகவல் வெளியிட வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 secs ago

விளையாட்டு

55 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்