திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம்

By செய்திப்பிரிவு

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (செப். 9) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக, க.பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள க.பொன்முடி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், க.அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் வரிசையில், திராவிட இயக்கத்திற்குத் தந்த கொடைகளில் ஒருவர். களப் போராளிகளில் ஒருவரான க.பொன்முடி, தனது 17 ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு, திராவிட இயக்கத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அவர் நாடு போற்றும் நற்றமிழ்ப் பேச்சாளர்; ஆழ்ந்த சிந்தனைமிக்க அவர் எந்தக் கருத்தையும் எவரும் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம், எளிமையாக எடுத்துவைக்கக் கூடியவர்.

1989-ல் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதன்முதலில் வெற்றி பெற்று, கருணாநிதியின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் போற்றத்தக்க முறையிலே பணியாற்றியவர். பிறகு போக்குவரத்துத்துறை, உயர் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், 1997 முதல் இன்று வரை 23 வருடங்கள் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராக இருந்து இயக்கத்தை மிகவும் சிறப்புற வளர்த்தவர்.

'தரம் குறைந்த அரிசி' என்பதை நிரூபிக்க அரசு அரிசி குடோனுக்குள், துணிச்சலாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, சென்று ஆய்வு நடத்தி, அதற்காகச் சிறை சென்றவர் மட்டுமின்றி, ராணிமேரி கல்லூரியை இடிக்கும் அதிமுக அரசின் திட்டத்தை எதிர்த்து, கல்லூரிக்குள் திமுக தலைவருடன் சென்று மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர். திமுகவின் முதன்மைக் களவீரர்களில் ஒருவரும், ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் வெற்றி பெற்ற க.பொன்முடி, திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு இப்பொதுக்குழு இதயபூர்வமாக பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, முக்கியமான இந்தப் பொறுப்பில் அவர் மேலும் சிறப்புடன் கட்சிப் பணியாற்றிட வாழ்த்துகிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, இளமைப் பருவத்திலேயே திராவிட இயக்க சித்தாந்தங்களில், இயல்பாகவே தீவிர ஈடுபாடு கொண்டு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி ஆகியோர்தம் எழுத்துகளையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் கசடறக் கற்று, பெரம்பலூர் மாவட்ட திமுக இலக்கிய அணிச் செயலாளர், 1997-ல் ஒன்றியச் செயலாளர், பிறகு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து, 2009 முதல், கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஆ. ராசா, பெரம்பலூர், நீலகிரி தொகுதிகளில் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

திமுகவின் சார்பில் மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கேபினட் அமைச்சராகவும் பணியாற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவர், சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் நிறைந்தவர்.

ஆ.ராசா, திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, கட்சிப் பணியில் அவர் மேலும் சீரும் சிறப்புமாகச் செயலாற்றிட வாழ்த்துகிறது".

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்