வெளிநாடுகளில் மருத்துவம் படித்து முடித்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களை ஏற்குமா மத்திய அரசு?- கடினமான தேர்வு முறையில் சலுகை வழங்க வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்புக்கு கனவு காணும் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண், நீட் நுழைவுத் தேர்வு, கட் ஆப் மதிப்பெண், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமை, சொந்த மாநிலத்தில் படிக்க முடியாத நிலை... இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.

இவற்றை எல்லாம் தாண்டி அரசு ஒதுக்கீட்டில் இடம் பெற்றுவிட்டால் பெரிய சாதனை. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை சாதாரண மாணவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பெரும் பணக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளவர்களால் மட்டுமே தனியார் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.

ஆனால், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை, கனவில் மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுடைய நோக்கத்தை பூர்த்தி செய்ய, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஆண்டுதோறும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து முடிக்கின்றனர். அவர்கள் படித்து விட்டு இந்தியா திரும்பிய பிறகும் அவர்களுக்கு சிக்கல்தான்.

வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவத் தொழில் செய்ய ‘வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு’ (FMGE - Foreign Medical Graduate Examination) நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை கடந்த 2002-ம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலிலோ அல்லது மாநில மருத்துவக் கவுன்சிலிலோ மருத்துவராகப் பதிவு செய்ய விரும்பினால், அவர் எப்எம்ஜிஇ தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுத தேவையில்லை. ஆனால், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா போன்ற மற்ற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்ற கண்டிப்பாக இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வு மிகவும் கடுமையாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 16 சதவீதத்தினர் மட்டும்தான் தேர்ச்சி பெறுகின்றனர்.

இந்தத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில், மொத்தம் 300 மதிப்பெண்கள். இந்தத் தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சிப் பெற முடியும். தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் இந்தியாவில் ஓராண்டு உள்ளுரை மருத்துவராக (இன்டர்ன்) பயிற்சி பெற வேண்டும். அதன்பிறகு தான் அவர் முழு மருத்துவராக முடியும்.

ஆனால், எப்எம்ஜிஇ தேர்வு மிகக் கடினமாக உள்ளதாக பல ஆண்டுகளாக புகார் கூறுகின்றனர். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் கூறுகின்றனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், வெளிநாடுகளில் படித்த மருத்துவர்கள் இந்தியாவில் பணிபுரிய முடியாமல் தவிக்கின்றனர்.

கரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமான சூழ்நிலையில், மருத்துவர்களின் பற்றாக்குறை வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தச் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படித்து முடித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இந்தச் சூழ்நிலையில், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நாடு முழுவதும் ஆன்லைனில் எப்எம்ஜிஇ தேர்வு நடைபெறுகிறது. கரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமை போன்ற காரணங்களால், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை 50 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதமும் எழுதியுள்ளார். இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த மனுவை மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு இந்திய மருத்துவக் குழு செயலர் கடந்த ஜூலை 30-ம் தேதி அனுப்பி உள்ளார்.

கரோனா பாதிப்பு போன்ற அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும் போது, அதை சமாளிக்க போதிய மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், ஏற்கெனவே இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்கவும் தேர்ச்சி மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைப்பது ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பலன் அளிக்கும் என்று வெளிநாடுகளில் மருத்துவம் முடித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

இதே நோக்கத்துடன்தான் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக கட் ஆப் மதிப்பெண்களை மத்திய அரசு 6 சதவீதம் குறைத்தது. அதேபோல் இம்மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ள எப்எம்ஜிஇ தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்