ஓசூர் வனப்பகுதியில் இருந்து நகரத்துக்குக் கூட்டமாகப் படையெடுத்த வண்ணத்துப் பூச்சிகள் 

By ஜோதி ரவிசுகுமார்

தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து ஓசூர் நகரப்பகுதிக்கு லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் மலர்களை நாடிப் பறந்து வந்தன. கரோனாவினால் வீடுகளில் கட்டுண்டு கிடக்கும் மக்களுக்கு, இந்த வண்ணத்துப் பூச்சிகளின் கட்டுப்பாடற்ற வரவு குதூகலத்தை அளித்தது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை அழகிய வண்ணத்துப் பூச்சிகளைப் பரவசத்துடன் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மரம், செடி, கொடிகளில் வாசமிக்க வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். இதே காலகட்டத்தில் இந்த வண்ண மலர்களில் தேன் அருந்தி மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவதற்காக லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளும் இந்த வனச்சரகங்களில் உற்பத்தியாகின்றன.

நடப்பாண்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனச்சரகங்களில் உற்பத்தியான வண்ணத்துப் பூச்சிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்து கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஓசூர் நகரப் பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. குறிப்பாக ஓசூர் நகரப்பகுதி, மாருதி கிரீன் ஃபீல்டு குடியிருப்புப் பகுதி, சென்னத்தூர், தொரப்பள்ளி, மத்திகிரி கால்நடைப்பண்ணை மற்றும் கெலமங்கலம், சூளகிரி அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலும் லட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் படையெடுத்து வந்த வண்ணமாக இருந்தன.

இதில் பெரும்பாலான வண்ணத்துப் பூச்சிகள் கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கலந்த அழகிய வண்ணங்களில் கூட்டம் கூட்டமாகப் பறந்து திரிந்தது கண்கொள்ளக்காட்சியாக அமைந்தது. குறிப்பாக ஓசூர் நகரப்பகுதியில் வீடுகள், சாலைகளில் குவிந்த ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு பரவசமடைந்த சிறுவர், சிறுமிகள் முதல் பெரியோர் வரை அவற்றைப் பிடித்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தேன்கனிக்கோட்டை கால்நடை (வனவிலங்குகள்) மருத்துவர் பிரகாஷ் கூறியதாவது:

''தமிழக அளவில் 256 வண்ணத்துப் பூச்சி இனங்கள் சாதனையளவாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 25-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்கள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் இனப்பெருக்கம் ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படும். வனத்தில் உள்ள யானைகளின் சாணம் மற்றும் கால்நடைகளின் சாணம் ஆகியவற்றின் கதகதப்பான சூழ்நிலையில் பெரும்பாலும் வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கம் நிகழ்கிறது.

தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் இங்குள்ள வனப்பகுதியில் மலரும் மலர்களிடையே மகரந்தச் சேர்க்கையை உருவாக்கும் வகையில், அதே காலகட்டத்தில் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் இனப்பெருக்கமும் நிகழ்வது சிறப்பாகும். ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட அனைத்து வனச்சரகங்களிலும் பரவலாகக் காணப்படும் “பிளைன் டைகர்”, “ஸ்டிரைப் டைகர்”, “காமன் எனிகிராண்ட்”, “காமன் கிராஸ் எல்லோ” ஆகிய மலர்கள் மற்றும் இதர மலர்களில் இந்த வண்ணத்துப் பூச்சிகள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

வனப்பகுதியில் லட்சக்கணக்கில் உற்பத்தியாகும் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் ஆயுட்காலம் சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. அதற்குள் கோடிக்கணக்கான மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது''.

இவ்வாறு கால்நடை (வனவிலங்குகள்) மருத்துவர் பிரகாஷ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்