இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறையை கைவிட்டு ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்: முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் அரசு ஊழியர்கள்

By ஆர்.பாலசரவணக்குமார்

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை இனியும் உதாசீனப்படுத்தாமல் இதுவரை கடைபிடித்து வந்த இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறையை கைவிட்டு, மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு 3 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலின வகுப்பினருக்கு 18 சதவீதம், பழங்குடியினத்தவர்களுக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தமிழக அரசு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை கடந்த 2003 முதல் தற்போது வரை கடைபிடித்து வருகிறது. அரசு தேர்வு முகமைகளான டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்றவை இனசுழற்சி (ரோஸ்டர்) அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்கி அரசுக்கு அனுப்பி வைக்கும் முதுநிலைப் பட்டியலின்படி (சீனியாரிட்டி) அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

நீதி மன்றங்களில் வழக்கு

69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது வெர்ட்டிக்கல் ரிசர்வேஷனாகவும், இதில் தமிழ்வழிக்கல்வி, ஆதரவற்ற விதவைகள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவது ஹரிசாண்டல் ரிசர்வேஷனாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வுக்கான முது நிலைப்பட்டியல் தயாரிப்பதால் தங்களது சட்டப்பூர்வமான உரிமை பறிபோய், பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாவதாகவும், பதவி உயர்வில் பின்னுக்கு தள்ளப்படுவதாகவும் ஆயிரக்கணக் கானோர் நீதி மன்றங்களில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

விதிகளில் மாற்றம்

ஏனெனில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியலில் 220-வது இடத்தில் இருக்கும் ஒரு அரசு ஊழியர் இனசுழற்சி அடிப்படையில் 10-வது இடத்துக்கு கொண்டு வரப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படுவதால், அதிக மதிப்பெண் பெற்ற அரசு ஊழியர்கள் பின்னுக்கு தள்ளப்படுவதாகவும், இடஒதுக்கீடு சதவீதம் அதிகரிப்பதாகவும் 2015-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு 2016 செப்.9 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தைக் கொண்டு வந்து, பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் செய்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் 2019-ல், ‘பதவி உயர்வுக்கான முதுநிலைப்பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமேயன்றி, சாதி மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது. அவ்வாறு பதவி உயர்வு அளிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு 2-வது முறையாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

தெளிவான சட்ட விதி தேவை

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றத்தில் 5-க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே தமிழக முதல்வர் பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புகளை உதாசீனப்படுத்தாமல் அதை அமல்படுத்த வேண்டும். உடனடியாக அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப்பட்டியல் தயாரிப்புக்கு தெளிவான சட்ட விதிகளை வகுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்