பல்கலைக்கழக இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்; அன்புமணி

By செய்திப்பிரிவு

பல்கலைக்கழக இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அன்புமணி இன்று (ஜூலை 7) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாணவர்களிடமும் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு மாறாக இவ்விஷயத்தில் மத்திய உயர்கல்வித்துறையின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இறுதி பருவத் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிவுகளை அறிவித்தால் தான், உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆனால், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதிப் பருவத் தேர்வுகளை எழுத எந்த மாணவரும் தயாராக இல்லை. மாறாக, இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அக மதிப்பீட்டுக்கான தேர்வுகள் மற்றும் முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், பெரும்பான்மையான மாநிலங்களின் மாணவர்களும் 'ட்விட்டர் டிரெண்டிங்' உள்ளிட்ட இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.

தேர்வை விட தங்களின் உயிர் முக்கியம் என்றும், அதை காப்பாற்றிக் கொள்ள தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் நிலைப்பாடு.

மாணவர்களின் கோரிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே ஆதரவு பெருகி வந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பருவத் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை தெரிவித்துள்ளது. இது குழப்பங்களை அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழக இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட போது, அது குறித்து பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியக்குழு வல்லுநர் குழுவை அமைத்தது.

அக்குழு அளித்த பரிந்துரையில், 'இறுதிப் பருவத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம். அதற்கு முந்தைய பருவத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அகமதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்' என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சம் அதிகரித்து வரும் சூழலில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாகவும், அது தொடர்பான முடிவை பல்கலைக்கழக மானியக்குழு மறு ஆய்வு செய்யும்படியும் உயர்கல்வித்துறை வலியுறுத்தியது.

ஆனால், இப்போது அதே உயர்கல்வித்துறை இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் இல்லை என்று ஜூன் மாத இறுதியில் கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இப்போது இறுதிப் பருவத் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என எந்த அடிப்படையில் கூறுகிறது?

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 27 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது; நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் ஆய்வு செய்யப்படாமல் நடமாடிக் கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள மாணவர்கள் தேர்வுகளை எழுதத் தயாராக இல்லை என்று கூறியுள்ளனர். அத்தகைய சூழலில் யாரைக் கொண்டு இறுதிப் பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தப் போகிறது?

கரோனா அச்சம் காரணமாக மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிஷா, ஹரியானா ஆகிய 7 மாநிலங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. தமிழ்நாட்டிலும் இது பற்றி முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே மாணவர்களின் பாதுகாப்பு கருதி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது; நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், கல்லூரி இறுதித் தேர்வுகளை மட்டும் நடத்தியே தீரப்போவதாக புதிய நிலைப்பாடு எடுப்பது எவ்வகையில் நியாயம்?

எத்தனை கோணத்தில் ஆய்வு செய்தாலும், தேர்வை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியமாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவு என்னவாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படாமல், தமிழ்நாட்டிலுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

49 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்