தந்தையுடன் பைக்கில் சென்றபோது பரிதாபம்: மாஞ்சா நூல் அறுத்து 5 வயது சிறுவன் பலி - நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்

By ஆர்.சிவா

பெரம்பூர் மேம்பாலத்தில் தந்தை யுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 5 வயது சிறுவன் மாஞ்சா நூல் அறுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பெரம்பூர் சோமத்தம்மன் காலனி 2-வது தெருவில் வசிப்பவர் ராஜி என்கிற அப்பு(30). டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அஜய்(5). வீட்டருகே உள்ள பள்ளியில் யுகேஜி படித்தார். ராஜிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை ராஜி ஓட்ட அவருக்கு பின்னால் மகனும், மனைவியும் அமர்ந்திருந்தனர். மதியம் 1.30 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது அறுந்து தொங்கிக் கொண்டு இருந்த பட்டத்தின் மாஞ்சா நூல் மகன் அஜய் கழுத்தில் சிக்கி அறுத்தது.

ரத்தம் கொட்டிய நிலையில் அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அஜய்யை அழைத்துச் சென்றனர். அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித் தனர். இது குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டம் விடுபவர்கள் தனது பட்டத்தால் மற்றவர்களின் நூலை அறுத்து விடுவதை வீரமாகவும், பெருமையாகவும் நினைக்கின்றனர். இதனால் பட்டம் விடும் நூல் உறுதியாக இருப்பதற்காக பல வேலைகளை செய்கின்றனர். ஆரோரூட் மாவு, கண்ணாடி துகள்கள், மயில்துத்தம், வஜ்ரம் பசை ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் பசையை சாதாரண நூலின் மீது தடவி மாஞ்சா நூல் தயாரிக்கின்றனர்.

இப்படி விடப்படும் பட்டங்கள் மற்றவரின் மாஞ்சா நூலால் அறுக்கப்பட்டோ கையில் இருந்து விடுபட்டோ சாலைகளில் வந்து விழும்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது. நச்சுக் கலவை பூசப்பட்டுள்ளதால் மாஞ்சா கயிறு அறுத்தவரின் உடலில் விஷம் பரவி உடனே உயிர்ப்பலி ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர் கள் அதை தாங்களே தயாரித்தனர். தேவை அதிகரித்ததை தொடர்ந்து சிலர் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வதை தொழிலாக செய்ய ஆரம்பித்தனர். சவுகார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் மாஞ்சா நூல் தயாரிப்பதை 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர்.

2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மெரினாவில் 4 வயது சிறுமியும், அரும்பாக்கத்தில் 24 வயது இளைஞரும் மாஞ்சா நூலில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்தனர். உடனே சில நாட்கள் மட்டும் மாஞ்சா நூல் விற்பவர்கள், பயன்படுத்துபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். சென்னையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாஞ்சா நூலில் சிக்கி 80 புறாக்களும், 20-க்கும் மேற்பட்ட காகம், கழுகு போன்ற பறவைகளும் இறந்திருப்பதாக ப்ளூகிராஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வடசென்னை பகுதியினர் பட்டம் விடுதல் மற்றும் மாஞ்சா தயாரித்தலில் அதிகமாக ஈடுபடுகின்றனர். மாஞ்சா நூலை பயன்படுத்தவும், தயாரிக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் தடைவிதித்துள்ளார். மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை கிடைக்கும். ஆனால் போலீஸார் இந்த சட்டத்தை பயன்படுத்துவதே இல்லை.

நீதிமன்றம் உத்தரவு

மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் போலீஸார் மாஞ்சா நூலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 secs ago

தமிழகம்

7 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

25 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

33 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்