'இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது': சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி. பேட்டி

By ரெ.ஜாய்சன்

சாத்தான்குளம் வியாபாரிகள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, "மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது" என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

அவர்களை கைது செய்த போது சாத்தான்குளம் போலீஸார் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள், வியாபாரிகள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களது சடலங்களை உறவினர்கள் நேற்று முன்தினம் மாலையில் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இரவு 7 மணியளவில் இருவரது சடலங்களும் சாத்தான்குளத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட வியாபாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த வியாபாரிகள் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை உயிரிழந்த ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் இன்று நேரில் வழங்கினர். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே பதறவைத்துள்ள மிக மோசமான லாக்அப் படுகொலையாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த தொகையையும், ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் நேரில் குடும்பத்திடம் கொடுத்துள்ளோம்.

இந்த குடும்பத்துக்கு திமுக உறுதுணையாக இருக்கும். தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம். லாக்அப் மரணங்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பதாக தேசிய குற்ற ஆவணத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்அப் மரணம் தொடர்பாக இதுவரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. யாருக்கும் தண்டனை கொடுக்கப்படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

மிக மோசமாக, மனித தன்மையே இல்லாமல் தாக்கப்பட்டு இருவர் இறந்துள்ளர். இந்த நிலை இனிமேல் வேறு எந்த குடும்பத்துக்கும் வரக்கூடாது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதனை கொலையாகவே கருத வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றார் கனிமொழி.

இதற்கிடையே சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு காரணமாக போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் காலை 11 மணி வரை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

சினிமா

32 mins ago

விளையாட்டு

38 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

50 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்