ஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: நடவடிக்கை கோரி குமரி ஆட்சியரிடம் மனு

By என்.சுவாமிநாதன்

பொதுமுடக்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பலரும் வேலையை இழந்துள்ளனர். சிலர் சம்பள வெட்டுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இப்படியான சூழலில் அரசு உத்தரவையெல்லாம் மீறி, பொது மக்களிடம் நிதி நிறுவனங்கள் வட்டி கேட்டு நெருக்குவதாகத் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாகப் புகார்கள் வெடிக்கின்றன.

இது தொடர்பாகப் பச்சைத் தமிழகம் கட்சியின் தென் மண்டலத் தலைவர் ஏ.எஸ்.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாவட்டத் தொண்டர் அணித் தலைவர் விஜயகுமார் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

''குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான மகளிர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் நுண்கடன் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுள்ளனர். இதற்கான தவணையை வாரம், மாதம் இருமுறை, மாதாந்திரம் என பல வகைகளில் வட்டியுடன் திரும்பச் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் இப்போது, பொதுமுடக்கத்தால் இவர்களது வருமானம் முழுவதும் முடங்கிப் போனதால் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடனுக்கான தவணைகளை இவர்களால் குறிப்பிட்ட காலத்தில் செலுத்த முடியவில்லை. இருப்பினும் கடன் வழங்கிய நிறுவனங்கள் இவர்களை வலுக்கட்டாயமாகத் தவணையைச் செலுத்தச் சொல்லி நிர்பந்திக்கின்றன. தவணையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் அவதூறான வார்த்தைகளில் பேசுவது, அவர்களது வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பது உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செயல்கள் எல்லாம் கடன் பெற்றவர்களை கூடுதல் இன்னலுக்கு உள்ளாக்குவதோடு எதிர்பாராத விளைவுகளையும், மோதல்களையும் உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.

ஆகவே, நிதி நிறுவனங்களால் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கடன் தவணையைச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த 3 மாத கால அவகாசத்தை வழங்க வேண்டும். இதை மீறும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். பாதிப்புக்கு உள்ளான மக்களை நெருக்கடி நிலையில் இருந்து பாதுகாத்திட வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு முரணாக மக்களை மிரட்டும் போக்கைத் தடைசெய்யவேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்