சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றுவதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By செய்திப்பிரிவு

வருமானத்தை மறைத்ததாக தங்கள் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், சென்னை முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015 ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரிக் கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு முதலில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்யக்கோரியும் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணையில் இருந்து வந்தது.

''மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மாற்றும்போது வேறு ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மட்டுமே மாற்ற வேண்டும். ஆனால் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும், குற்றச்சாட்டு கூறப்படும் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தொடர்பான மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு பணிகள் அனைத்தையும் முடித்த பிறகு வருமான வரித்துறை இந்த வழக்கைப் பதிவு செய்தது தவறு. மறு மதிப்பீடு பணிகளை முடித்த பிறகு மீண்டும் வரி செலுத்தியதை மறு ஆய்வு செய்வது தவறு'' என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், இருவரின் கணக்குகளின் மதிப்பீடு முடிந்தாலும், அதை மறுமதிப்பீடு செய்யத் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நீதிபதி எம்.சுந்தர் இன்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் வருமான வரித்துறை வாதங்களை ஏற்று கார்த்தி சிதம்பரம் தரப்பின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்