கரோனா கொல்லவில்லை; கருணையில்லா மனம் கொன்றது: கவனிப்பாரற்று சாலையில் உயிரிழந்த கூலித் தொழிலாளி

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் போக்கிடம் இல்லாமல் சகோதரி வீட்டுக்கு வந்த கூலித் தொழிலாளி புறக்கணிப்பு காரணமாக சாலையில் உயிரிழந்தது சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்று ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட ஊரடங்கினால் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டது சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், கூலித் தொழிலாளர்கள், அண்டை மாநிலத் தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள்தான்.

ஊரடங்கால் அனைத்தும் முடங்கிய நிலையில் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. அரசின் நிவாரணம் ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான். ரேஷன் அட்டை இல்லாதவர்கள் நிலை திண்டாட்டம்தான். வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் அவர்கள் வேலை செய்த பகுதிகளில் முடங்கிப்போனார்கள். அதில் நிவாரண உதவி கிடைக்காதவர்களும் உண்டு.

தன்னார்வலர்கள், போலீஸார், மாநகராட்சி அம்மா உணவகம் மூலம் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு கிடைக்கிறது. சிலர் தங்கள் சொந்தங்களை நாடிச் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தவர்தான் ரவி (56). சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் பணியைச் செய்து வந்தார். கரோனா ஊரடங்கு இவரையும் பாதித்தது. ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் வருமானமின்றித் தவித்த இவர் சைதாப்பேட்டையை அடுத்த ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டுக்குச் சென்றார்.

ரவிக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ரவியை சோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரது சளி மாதிரியை எடுத்தபின் அவரை வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தி, மீண்டும் வீட்டுக்கு அனுப்பி அனுப்பியுள்ளனர். ஆனால், வீட்டு உரிமையாளர் அவரை அனுமதிக்கவில்லை. வாடகை வீடு என்பதால் சகோதரியும் தனது சகோதரரை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.

இதனால் போக இடமில்லாமல் ரவி பக்கத்தில் உள்ள ஒரு பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். அக்கம் பக்கத்தினர் இரக்கப்பட்டு உணவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு, மன உளைச்சலால் ரவி நேற்று காலை உயிரிழந்தார்.

ரவி கரோனாவால் இறந்துவிட்டார் என திடீரென அனைவரும் சந்தேகப்பட, போலீஸார் பாதுகாப்பாக உடலை எடுத்துச் சென்றனர். அந்த இடம் கிருமிநாசினி, ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ரவிக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் வீட்டு உரிமையாளரை அழைத்து எச்சரித்து அறிவுரை கூறினர். பலரது அலட்சியத்தாலும் சரியான கவனிப்பு இல்லாததாலும் கூலித் தொழிலாளி ரவி உயிரிழந்துவிட்டார் எனத் தெரியவந்துள்ளது.

ரவி என்கிற கூலித் தொழிலாளியைக் கரோனா கொல்லவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்களின், உறவுகளின் கருணையில்லா மனம்தான் கொன்றுவிட்டது என அங்குள்ள சிலர் வருத்தத்துடன் புலம்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

வணிகம்

22 mins ago

தமிழகம்

26 mins ago

சுற்றுலா

30 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

40 mins ago

கல்வி

43 mins ago

கல்வி

9 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 min ago

தமிழகம்

1 hour ago

மேலும்