தென்மாவட்டங்களில் வீரியமடையும் கரோனா: தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமா?- மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்கவில்லையா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கரோனா வீரியமடைந்து வருகிறது.

இதற்குக் காரணம் மக்களின் அலட்சியம் என்று அதிகாரிகள் தரப்பிலும் அதிகாரிகளின் மெத்தனம் என மக்கள் தரப்பிலும் மாறிமாறி குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 523 பேரும், கோவையில் 141 பரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பக்கட்டத்தில் திருநெல்வேலியைத் தவிர தென் மாவட்டங்களில் கரோனா அதிகமாகப் பரவவில்லை.

தென்காசி, முதல் சில வாரங்கள் ‘கரோனா’ தொற்று கண்டறியப்படப்படாத மாவட்டமாக இருந்தது. ஆனால், கடந்த சில வாரமாக தென் மாவட்டங்களில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் தற்போது திருநெல்வேலியில் 63 பேருக்கும், விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு அதிகரித்து 32 பேராக ‘கரோனா’ நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தது.

ராமநாதபுரத்தில் 14 பேரும், சிவகங்கையில் 12 பேரும், தேனில் 43 பேரும், மதுரையில் 75 பேருக்கும், திண்டுக்கல்லில் 80 பேருக்கும், கன்னியாகுமரியில் 16 பேருக்கும் இந்த நோய் வந்துள்ளது.

தற்போது மதுரை,விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் ‘கரோனா’ தொற்றின் வேகம் குறையவில்லை. எந்த நேரத்திலும் இந்த நோய் சமூக பரவலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் ‘கரோனா’ பரவலில் தெற்கு மண்டலம் பாதுகாப்பாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பெரும் நகரத்திற்கு அடுத்து தெற்கு மண்டல மாவட்டங்களில் ‘கரோனா’ வேகம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மதுரை மாநகராட்சியில் இந்த நோய், எளிய அடித்தட்டு மக்களுக்கும் பரவத்தொடங்கியுள்ளது.அவர்கள் ஊரடங்கில் ஒத்துழைக்காமல் வழக்கம்போல் நடமாடியதால் நோயாளிகளுடன் தொடர்பே இல்லாதவர்களுக்கு கூட ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனாலே, சென்னை, திருப்பூர், கோவை, சேலத்துடன் மதுரைக்கும் முழுஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மதுரை மாநகராட்சியில் மட்டும் நேற்றுவரை 43 பேருக்கு பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு போலீஸார், 5 குழந்தைகள், பட்டரின் தாய் உள்ளிட்ட 10 பேருக்கு யாரிடம் இருந்து இந்த நோய் பரவியது என்பதை தற்போத வரை சுகாதாரத்துறையினரால் உறுதி செய்ய முடியவில்லை.

அதனால், மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மக்கள் நேற்று முதல் மக்கள் வீட்டுக்காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.

கடைசி சில நாட்களாக தென்மாவட்டங்களில் இந்த நோய் வீரியம் அடைய ஊரடங்கில் மக்கள் அரசு ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், மக்கள் ஒரளவுக்கு ஒத்துழைக்கதான் செய்ததாகவும், அதிகாரிகள் பரவலைத் தடுப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மதுரையில் கரோனா நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்கள் உள்ளன. இதில், 17 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கக்கூடிய 12 குடியிருப்புப்பகுதிகள் மட்டுமே ‘கரோனா’ பரவியுள்ளது.

தற்போது இந்த குடியிருப்புகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யபப்ட்ட இந்த குடியிருப்புபகுதிகளில் நேற்று வரை ஆணையூரில் 5 பேரும், செல்லூரில் 8 பேரும், அண்ணாநகரில் 8 பேரும், பழங்காநத்தத்தில் ஒருவரும், கோமதிபுரத்தில் ஒருவரும், சிக்கந்தர சாவடியில் ஒருவரும், குப்புபிள்ளை தோப்பில் ஒருவரும், மாப்பாளையத்தில் 2 பேரும், மதிச்சியத்தில் ஒருவரும், மேலமடையில் ஒருவரும்,நாராயணபுரத்தில் ஒருவரும், நரிமேட்டில் ஒருவரும், பெரியார் பஸ்நிலையம் பகுதியில் இருவரும், ரேஸ்கோர்ஸ் காலனியில் ஒருவரும், எஸ்.ஆலங்குளத்தில் ஒருவரும், தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒருவரும், வண்டியூரில் 4 பேரும், மேல மாசி வீதியில் 2 பேரும், கூடல்நகரில் ஒருவரும், ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 43 பேரில் 13 பேர் இதுவரை குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர், ’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்