முகக் கவசமாக கைக்குட்டை, துணிகளைப் பயன்படுத்தலாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

By செய்திப்பிரிவு

அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே வரும்போது சாதாரண இரண்டடுக்கு முகக் கவசங்களைப் பயன்படுத்தலாம் அல்லது கைக்குட்டை அல்லது சாதாரண துணிகளையும் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களை பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ள ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் CSR நிதியில் வழங்கப்பட்ட 25 வாகனங்களை ஆணையர் பிரகாஷ், இன்று ரிப்பன் மாளிகையிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததாவது :

''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் 26 தடவல்கள் சேகரிக்கும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பரிசோதனை மையங்களுக்கு பொதுமக்கள் சென்று வருவதில் எந்த ஒரு சிரமமும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சியின் சார்பில் பரிசோதனை மையங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று மீண்டும் அவர்களின் இல்லங்களில் கொண்டு சேர்க்க வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக ஃபோர்டு இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் CSR நிதியில் 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர்கள், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவினங்களை ஃபோர்டு இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேபோன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவத் தேவைகளுக்காக வெளியே செல்ல இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையினை மாநகராட்சியின் 1913 உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக மகேந்திரா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் 10 வாகனங்கள் CSR நிதியில் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும்போது முகக் கவசம் (Mask) அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் வகையில் குறைந்தது இரண்டடுக்கு முகக்கவசம் (அ) கைக்குட்டை (அ) வீட்டில் உள்ள சுத்தமான துணியால் ஆன முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம்.

முகக்கவசம் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே துணியால் ஆன இரண்டடுக்கு (அ) மூன்றடுக்கு முகக்கவசத்தைக் கையினாலோ அல்லது தையல் இயந்திரம் கொண்டோ தயாரித்துக் கொள்ளலாம்.

அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மருத்துவ முகக்கவசம் (Surgical Mask) (அ) N 95 முகக்கவசத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமில்லை. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய மறுபயன்பாடு கொண்ட முகக்கவசத்தைப் பயன்படுத்தினாலே போதுமானது.

ஒருவருக்கு இரண்டு முகக் கவசங்களை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். உபயோகித்தபின் சோப்பு மற்றும் வெந்நீரில் சுத்தம் செய்து நன்கு உலர்ந்த பின் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற மறுபயன்பாட்டிற்கு உகந்த முகக்கவசங்களை தூய்மை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கரோனா வைரஸ் நோய்த் தொற்றுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. அவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தனித்தனியாக முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்''.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

உலகம்

19 mins ago

தமிழகம்

24 mins ago

உலகம்

29 mins ago

வாழ்வியல்

4 mins ago

விளையாட்டு

32 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்