இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்குக் கிடைத்த அளப்பரிய உதவி: சுற்றுலா அமைச்சகத்தின் புதிய இணைய உதவி

By செய்திப்பிரிவு

கரோனா பேரிடர் காரணமாக இந்தியாவில் பயணம் செய்த வெளிநாட்டினர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களைக் கண்டறிந்து உதவ நாங்கள் இந்தியாவில் சிக்கியுள்ளோம் (www.strandedinindia.com) என்கிற இணையதளத்தைத் தொடங்கி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் காத்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“ ‘நாங்கள் இந்தியாவில் சிக்கியுள்ளோம்’ (www.strandedinindia.com) என்ற இந்தியாவில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்த இணையதளம் மார்ச் 31 ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. உலக அளவில் பரவி வரும் கோவிட்-19 தொற்றின் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.

உதவி தேவைப்படும் சுற்றுலாப் பயணிகள் இணையதளாம் மூலம் தொடர்பு கொள்வதற்கான சில அடிப்படைத் தகவலையும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தன்மைகளையும் அதில் பதிவிடக் கேட்டுக்கொள்ளப் பட்டனர். இந்த இணையதளம் செயல்படத் தொடங்கிய முதல் ஐந்து நாட்களிலேயே நாடு முழுவதிலும் இருந்து 769 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உதவிக்காகப் பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு மாநில அரசும் யூனியன் பிரதேச நிர்வாகமும் அத்தகைய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்துள்ளன. சுற்றுலா அமைச்சகத்தின் 5 மண்டல அலுவலகங்களும் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியாக இணையதளத்தில் பதிவு செய்துள்ள உதவி வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்ய முயன்று வருகின்றன.

வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே உதவிகளை உடனடியாக வழங்க இவர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பயணம் மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் விசா தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க சுற்றுலா அமைச்சகத்தின் மண்டல அலுவலகங்கள் குடிபுகல் அலுவலகம் (Bureau of immigaration) மற்றும் அயல்நாட்டினருக்கான மண்டலப் பதிவு அலுவலகங்கள் (FRRO) ஆகியவற்றோடு இணைந்தும் செயலாற்றி வருகின்றன.

நாட்டுக்குள் / மாநிலத்துக்குள் இத்தகைய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கும் அவர்களின் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகம் / காமன்வெல்த் தூதரகம் / உதவித்தூதரக அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தை அணுகுவதும் பயன்படுத்துவதும் எளிதாக இருப்பதால் பயணம் மேற்கொள்ள முடியாமல் இருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இ-மெயில், தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முடிவதோடு தேவைப்படும் உதவிகளுக்கு ஏற்ப அவர்களை நேரிலும் சென்று சந்திக்க முடிகிறது.

மேலும் இந்தியாவில் உள்ள அவர்களது சொந்த நாட்டின் அயலக அலுவலகத்தோடு அவர்கள் தொடர்பு கொள்வதற்கும் உதவிகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவது குறித்த அவ்வப்போதைய தகவல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுவதோடு தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி, உணவு மற்றும் தங்குமிடமும் அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 லாக்-டவுனால் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பிஹாரில் உள்ள சுபால் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் சிக்கிக் கொண்டார். அவரது மகனுக்கு டெல்லியில் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் இவர் இணையதளத்தில் தனது நிலைமையைக் கூறி உதவி கேட்டார்.

அமைச்சகங்களுக்கு இடையில், துறைகளுக்கு இடையில் மற்றும் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு அந்தப் பெண்மணி டெல்லிக்குச் திரும்பிச் செல்ல சிறப்பு பயண அனுமதி பெற்றுத் தரப்பட்டது. அவர் டெல்லிக்கு பத்திரமாகச் சென்று சேர்ந்தார். இதற்கான முயற்சிகள் எடுத்த சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

சென்னைக்கு அறுவை சிகிச்சைக்காக (மருத்துவச் சுற்றுலா) வந்திருந்த கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த இருவர் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு பயணம் மேற்கொள்ள முடியாமல் சென்னையிலேயே தவித்து வந்தனர். மாநில அரசு, கோஸ்டா ரிகா தூதரகம் மற்றும் இந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஓட்டல் நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து பதற்றத்துடனும் கவலையுடனும் இருந்த அவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தன. இப்போது அவர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அகமதாபாத்தில் சிக்கிக் கொண்டனர். அவருக்கு வலிப்பு நோய் உள்ளது. ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அவருக்குப் பரிந்துரைத்திருந்த மருந்துகள் தீர்ந்து விட்ட நிலையில் பொதுமுடக்கம் காரணத்தினால் அவரால் அந்த மருந்துகளை தொடந்து உட்கொள்ள முடியவில்லை.

பிரச்சினையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இந்த இணையதளம் கொண்டு சென்றது. சுற்றுலாப் பயணிக்குத் தேவையான மருந்துகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உணவும், உள்ளூர் பயணத்திற்கு தேவையான வாகனமும் கொடுக்கப்பட்டது. இப்போது அவர்கள் வசதியுடன் சுகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்”.

இவ்வாறு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

50 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்