கோயம்பேடு சந்தையில் வழக்கம்போல் வந்த காய்கறிகள்; மக்கள் வரத்து குறைந்ததால் விலை சரிந்தது- சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை

By செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வரத்து வழக்கமாக இருந்தும், மக்கள் வரத்து குறைந்ததால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் காய்கறி, மீன்சந்தைகள் மற்றும் மளிகை கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை வழக்கம் போல் இயங்கி வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களாக வழக்கமான காய்கறிகள் வந்த போதிலும் மக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளின் விலை நேற்று குறைந்திருந்தது.

போலீஸ் கெடுபிடி காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்களின் எண்ணக்கை குறைந்துள்ளது. மேலும் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியில் வர விரும்பாததாலும், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்பனை குறைந்துள்ளது. அதனால் காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.15 ஆக குறைந்திருந்தது. மேலும் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யுமிடத்திலிருந்தே வரத்து குறைந்ததால் சாம்பார் வெங்காயம் ரூ.80, அவரைக்காய் ரூ.45, பீன்ஸ் ரூ.65 என விலை சற்று உயர்ந்துள்ளது.

மற்ற காய்கறிகளான, கத்தரிக்காய், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.23, வெண்டைக்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.8, கேரட் ரூ.18, பீட்ரூட், பச்சை மிளகாய் தலா ரூ.10, புடலங்காய், முருங்கைக்காய் தலா ரூ.20 என விற்கப்பட்டு வருகின்றன.

பழம் மற்றும் மலர் சந்தை பகுதிகளிலும் மக்கள் வரத்து குறைவாக இருந்தது. அங்கும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை பெரிய அளவில் உயரவில்லை. பழ சந்தையில் ஆரஞ்சு கிலோ ரூ.70-க்கும், திராட்சை 2 கிலோ பெட்டி ரூ.200-க்கும், மாதுளை 10 கிலோ பெட்டி ரூ.700-க்கும் விற்கப்பட்டது.

மலர் சந்தையில் ஜாதி மல்லி கிலோ ரூ.200 முதல் ரூ.300, சாமந்தி கிலோ ரூ.60 வரை, கனகாம்பரம் ரூ.400, ரோஜா கிலோ ரூ.50 முதல் ரூ.110 வரை விற்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக காய்கறி வியாபாரிகள் சிலர் கூறும்போது, “காய்கறிகள் வழக்கம் போல வருகின்றன. ஆனால் மக்கள் வெளியில் வர விரும்பாததால், விற்பனைமந்தமாக உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் தரும் அளவுக்கு கூட லாபம் வரவில்லை. அரசு நிர்வாகம், கோயம்பேடு சந்தையை மூடக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. மக்கள் வராமல், கடையை திறந்து வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை” என்றனர்.

இந்த சந்தையில் சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை. வழக்கமாக காய்கறிவாங்குவது போன்று கூட்டமாகநின்றே வாங்கினர். கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தவில்லை. போலீஸாரும் எதையும் கண்டுகொள்ளாமல் பணி நேரத்தை கழித்துவிட்டு கிளம்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

16 mins ago

சினிமா

13 mins ago

வாழ்வியல்

44 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

58 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்