நிர்பயா சகோதரனை பைலட் ஆக்கிய ராகுல் காந்தி; குடும்பத்துக்கு 7 ஆண்டுகளாக உதவி: தந்தை வெளியிட்ட ரகசியம் - கே.எஸ்.அழகிரி தகவல்

By செய்திப்பிரிவு

நிர்பயா குடும்பத்திற்கு மறைமுகமாக ராகுல் காந்தி உதவியதையும், குடும்பத்துக்குப் பொருளாதார உதவி, மகனுக்கு கவுன்சிலிங், பைலட்டாக ஆக்கியது போன்ற உதவிகளைச் செய்த ராகுல் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என தன்னைத் தடுத்து விட்டதாக நிர்பயாவின் தந்தை தற்போது தெரிவித்துள்ளதை அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

“டெல்லியைச் சேர்ந்த துணை மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது அதன் ஓட்டுநர் உட்பட 6 பேர் அவரது நண்பரைத் தாக்கி, நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்தனர்.

பிறகு ஓடும் பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த கொடுமை நடந்தது.

இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரில் 4 பேருக்கு 7 ஆண்டுகள் கழித்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடுமையான குற்றத்திற்கு கடுமையான தண்டனை விதிப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

தன் மகள் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட பின் நடைபிணமாக இருந்த தங்களுக்கு, உணர்வுபூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்தவர் ராகுல் காந்தி என, நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் மெய்சிலிர்க்க தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அதேசமயம், இந்த உதவியை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல் காந்தி கண்டிப்பாக கூறியதையும் பத்ரிநாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனை தள்ளிப்போகும்போதெல்லாம் துவண்டுபோன நிர்பயாவின் பெற்றோரும், தங்கள் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஒரு செய்தி நிறுவனத்துக்கு நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் மகள் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டது முதல், அப்போது காங்கிரஸ் துணை தலைவராக இருந்த ராகுல் காந்தி பேருதவி செய்ததை முதன்முறையாக நினைவுகூர்ந்துள்ளார்.

நிர்பயாவுக்கு கொடுமை நிகழ்ந்தபோது, பலர் தங்களுக்கு உதவ முன் வந்ததாக தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்தியின் உதவியை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான ரீதியில் ராகுல் காந்தி உதவியதோடு, வழக்கு முடியும் வரை பொருளாதார உதவி செய்ததாகவும் பத்ரிநாத் சிங் கூறியுள்ளார்.

நிர்பயாவின் இழப்பால் மன ரீதியாக பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்ததோடு, அவரை பைலட் ஆக்கியதும் ராகுல் காந்திதான் என்ற தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரசியல் எவ்வாறாக இருந்தாலும், ராகுல் காந்தி எங்களுக்கு ஆண் தேவதை என வர்ணித்துள்ள பத்ரிநாத் சிங், இவ்வளவு உதவிகளையும் செய்துவிட்டு, அதனை ரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட தகவலை, தமது பேட்டியின் போது முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிற வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிர்பயா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோதனையில், மனிதாபிமான உணர்வோடு ராகுல் காந்தி விளம்பரம் இல்லாமல் செய்த உதவியை 7 ஆண்டுகள் கழித்து நிர்பயாவின் பெற்றோர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக அரசியல்வாதிகள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் பலமடங்கு கூடுதலான விளம்பரத்தை தேடி ஆதாயம் தேடுவது இயல்பு. ஆனால், ராகுல் காந்தி எவ்வித விளம்பரமும் இன்றி, பாதிக்கப்பட்ட நிர்பயா குடும்பத்தினருக்கு செய்த உதவியை இன்றைக்கு நாடே போற்றுகிறது, பாராட்டுகிறது”.

இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்