தயாநிதி மாறன் முன்ஜாமீன் ரத்து: சிபிஐ-யிடம் 3 நாட்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், சிபிஐ-யிடம் தயாநிதி மாறன் 3 நாட்களுக்கு சரணடைய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டார்.

நீதிபதி வைத்தியநாதன் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

‘‘மனுதாரர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மினி தொலைபேசி இணைப் பகங்களை சட்டவிரோதமாக மனு தாரர் நிறுவியுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் சரணடைய அவகாசம் வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, மனுதாரர் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. வரும் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் மனுதாரர் சரணடைய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

தங்கள் விசாரணைக்கு தயாநிதி மாறன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற சிபிஐ தரப்பு வாதத்தை ஏற்று, நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி ஆஜராகும்படி தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதைத்தொடர்ந்து தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "இவ்வழக்கில் 2011-ம் ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபரில் சிபிஐ சம்மன் அனுப்பியது. நான் ஒரு அப்பாவி என சிபிஐ அதிகாரிகளுக்கு பல தடவை கடிதம் எழுதினேன். இவ்வழக்கில், இதுவரை 60 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இவ்வழக்கில் என்னை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். என் மீதான குற்றச் சாட்டுகள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றது. இவ்வழக்கில் என்னைக் கைது செய்வதே சிபிஐயின் நோக்கமாக இருக் கிறது. எனவே, எனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா இம்மனுவை விசாரித்து, "மனுதாரருக்கு 6 வாரம் இடைக்கால முன் ஜாமீன் அளிப்பதுடன், இந்த காலக்கட்டத்தில் வழக்கு விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்காவிட்டால், சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்" என்றும் உத்தரவிட்டார்.

பின்னர், சிபிஐ விசாரணைக்கு தயாநிதி மாறன் முழுமையாக ஒத்துழைக்காததால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிபிஐ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து வந்தார். தயாநிதி மாறன் தரப்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சிபிஐ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலனும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், ஆகஸ்ட் 10-ம் தேதி (இன்று) இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி, நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

51 mins ago

க்ரைம்

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்