ரூ.2,440 கோடி மதிப்பிலான பாரத் நெட் நிறுவனத்தை நிர்வகிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியே இல்லையா? - ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிமுக ஆட்சியில் தொடரும் அநீதி குறித்து தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கிப் போனது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“டெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்த, தகவல் தொழில்நுட்பத்துறை அரசு செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் அதிகாரியை, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று மாற்றி பழி வாங்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு கண்ணாடி வலையமைப்பு நிறுவனத்தின் மூலம் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புக்கான உட்கட்டமைப்பை இணைக்கும் 2,441 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவிருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பான டெண்டர் முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே ஒரு வாரப் பத்திரிகையில் விரிவாகச் செய்திகள் வெளிவந்தன.

அப்போதே திமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு “இது குறித்து விசாரிக்க வேண்டும். டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்று எச்சரித்திருந்தார். ஆனால், துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் தாங்க முடியாத தலையீடுகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்து, சந்தோஷ்பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதற்கு விண்ணப்பித்துள்ளார் என்று செய்தி வெளிவந்தது.

உடனே நானே ஒரு அறிக்கை வெளியிட்டேன். “நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளைப் பாதுகாத்திட தலைமைச் செயலாளர் முன்வர வேண்டும்” எனவும், “ஒரு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வில் செல்லும் அளவிற்கு அந்த டெண்டரில் நடைபெற்றுள்ள மர்மம் என்ன? யாரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பி, முதல்வரே ஒரு விளக்கமான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி இருந்தேன்.

இவ்வளவுக்குப் பிறகும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரோ, முதல்வரோ இது குறித்த எந்த விளக்கத்தையும் தரவில்லை. “பாரத் நெட்”, “தமிழ்நெட்” திட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தில்லுமுல்லுகள், திரைமறைவு ரகசியப் பேரங்கள் குறித்து அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் சந்தோஷ்பாபு ஐஏஎஸ் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து நவம்பர் 2019-ல் ஐஏஎஸ் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐஏஎஸ் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த “அதிகாரிகள் மாறுதல்” திருவிளையாடல்களை அமைச்சரும், முதல்வரும் கூட்டணி அமைத்து அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்? 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள மிக முக்கியமான பாரத் நெட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த அரசில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் யாருமே கிடைக்கவில்லையா? மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை - அதிமுக அரசின் ஊழலுக்கு ஒத்துவராமல் ஒதுங்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை எல்லாம் “டம்மி” பதவிகளுக்கு மாற்றி, அரசு நிர்வாகத்தை அடியோடு சீர்குலைத்துத் தரைமட்டமாக்க தலைமைச் செயலாளர் எப்படி அனுமதிக்கிறார்?

நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளைத் தங்கள் விருப்பம் போல் அமைச்சர்களும், முதல்வரும் பந்தாடுவதற்கும், ஆட்டிப் படைப்பதற்கும் எப்படி இடமளிக்கிறார்? ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி - அதிமுக ஆட்சியில் தொடரும் அநீதி குறித்து தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் முணுமுணுப்பே காட்டாமல் முடங்கிப் போனது ஏன்? அச்சுறுத்தல் காரணமா? தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நாட்டிலேயே சிறந்த அதிகாரிகள்.

இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அதிகாரிகள். அப்படிப்பட்ட பெருமை மிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டமைப்பை அடியோடு தகர்க்கும் செயலில் முதல்வர் பழனிசாமி ஈடுபடுவதை காலம் நிச்சயம் மன்னிக்காது.

பாரத் நெட் மற்றும் தமிழ் நெட் திட்டம் அதிமுக அரசின் கீழ் உருப்படியாக நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்திருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவும் இத்திட்டத்தை அதிமுக அரசு ஊழல் மயமாக்கி விடும் என்பதற்கான ஆதாரங்களாக இந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

ஆகவே, இத்திட்டத்தின் டெண்டர், அது தொடர்பான கோப்புகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் உடனடியாக கைப்பற்றி, லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரணையில், “முதற்கட்ட விசாரணையிலேயே விரிவான விசாரணை நடத்தும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது” என்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அறிவித்திருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, இந்த பாரத் நெட் திட்டம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணையையாவது செய்திட முன் வர வேண்டும் என்றும், ஊழல் நடப்பதற்கு முன்பே தடுப்பதும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மற்றும் விழிப்புணர்வு ஆணையத்தின் கடமைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்