தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி இன்று (ஜன.20) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. தனியார் பால் விலை ஏற்கெனவே மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு முறை பால் விலையை உயர்த்துவது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அதிக அளவில் பால் விநியோகிக்கும் 3 தனியார் நிறுவனங்களும் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பாலின் விலை 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பாலின் விலை 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், செறிவூட்டப்பட்ட பாலின் விலை 60 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 3 முறை பால் விலையை உயர்த்திய தனியார் நிறுவனங்கள், இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே பால் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன.

பால் தட்டுப்பாடு, கொள்முதல் விலை உயர்வு, நிர்வாகச் செலவு உள்ளிட்ட காரணங்களால் தான் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இது தவிர்க்க முடியாதது என்றும் தனியார் நிறுவனங்கள் கூறியுள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும்.

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் தரமான பாலை ஆவின் நிறுவனம் வழங்குகிறது. தனியார் நிறுவனங்களை விட பொதுத்துறை நிறுவனமான ஆவினின் நிர்வாகச் செலவு மிகவும் அதிகமாகும். ஆனாலும், ஆவின் ஒரு லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் ரூ.43, நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.47, செறிவூட்டப்பட்ட பால் ரூ.51 என்ற விலையில் விற்பனை செய்கிறது. அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.3 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 6 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே விலையை உயர்த்தியது. ஆவின் பால் விலை தனியார் பால் விலையை விட லிட்டருக்கு ரூ.11 வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களின் விற்பனை விலையை விட குறைந்த விலைக்கு பால் விற்பனை செய்ய முடியும் என்பதைத் தான் இது காட்டுகிறது. ஆனாலும், தனியார் நிறுவனங்கள் தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பால் தேவையில் சுமார் 80 விழுக்காட்டை பூர்த்தி செய்கின்றன என்பதால் அவை அனைத்தும் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு பால் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் கிடைக்காத நிலையில், தனியார் பாலைத் தான் பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுக்கு மூன்று முறை தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

ஒருமுறை லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்தப்படுவதாகவும், ஆண்டுக்கு மூன்று முறை விலை உயர்த்தப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், தினமும் ஒரு லிட்டர் பால் வாங்கும் குடும்பம் மாதத்திற்கு ரூ.360 கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். இதை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால், தனியார் நிறுவனங்களின் அநியாயமான பால்விலை உயர்வை கட்டுப்படுத்தும் கடமை அரசுக்கு உண்டு.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், சந்தையில் ஒரு நிறுவனமோ, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களோ ஏகபோகம் செலுத்துவதை முறியடிக்க வேண்டும் என்பது தான் அடிப்படை ஆகும். அதனால் தான் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தனியாரை மக்கள் நம்பியிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடத்தப்படுகின்றன. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் நியாயவிலைக் கடைகள் நடத்தப்படுகின்றன.

அதே பணியை பால் சந்தையில் ஆவின் நிறுவனமும் செய்ய வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்தின் சந்தை பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதால் தான் தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பால் தேவையில் குறைந்தது 50 விழுக்காட்டையாவது பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆவின் நிறுவனத்தின் சந்தைப் பங்கை உயர்த்த வேண்டும்.

உடனடித் தேவையாக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அந்த நிறுவனங்களின் பால் விலை உயர்வை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 mins ago

தமிழகம்

55 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்