தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர்
வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

‘‘தஞ்சைத் தரணியில் மாமன்னர் இராசராச சோழன் எழுப்பிய பெருவுடையார் கோயில், ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழரின் பெருமையையும், கட்டிடக் கலையையும் உலகத்திற்குப் பறைசாற்றும் சின்னமாகப் புகழ் பெற்று விளங்குகிறது.

நவீன கட்டிடக்கலை வல்லுநர்களாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்குத் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் அமைப்பு, தமிழர்களின் கட்டிடக்கலைக் கீர்த்தியை விண்முட்டப் பரவச் செய்துள்ளது.

1010-ஆம் ஆண்டு மாமன்னர் இராசராச சோழனால் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் 1987-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பன்னாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு, பெருவுடையார் கோவில் எழுப்பிய ஆயிரமாவது ஆண்டு விழா, அப்போதைய முதல்வர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களால் அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

1996-ஆம் ஆண்டு, தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆண்டு 2020, பிப்ரவரி 5-ஆம் நாள் குடமுழுக்கு நடத்துவதற்கhன ஏற்பாடுகள் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வருகின்றன.

‘தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்’ என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்தபோது சிவனடியார்கள், சித்தர் வழி அமைப்பினர், சைவ சமய அறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

‘தமிழில் குடமுழுக்கு’ எனும் கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23-ஆம் தேதி தஞ்சையில் மாநாடு நடத்துவது என்று தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு அறிவித்தது. இந்த மாநாடு வெற்றி பெற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் முறைப்படி குடமுழுக்கு எனும் கோரிக்கையைத் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில் சைவ நெறி, வைணவ நெறி மற்றும் குலத்தெய்வக் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மாமன்னர் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் முறைப்படிதான் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், தஞ்சைப் பெரிய கோவிலின் அமைப்பு முறையும் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது.

தஞ்சைப் பெருவுடையார் கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி; தமிழ் உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216. சிவலிங்கத்தின் உயரம் 12 அடி; தமிழ் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கப் பீடம் 18 அடி; தமிழ் மெய் எழுத்துக்கள் 18.சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி;தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247.

இவ்வாறு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்குப் பெருவிழாவைத் தமிழ் முறைப்படி நடத்துவதுதான் சாலப் பொருத்தம் ஆகும். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கhன ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்